/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.எம்.டி.ஏ., திட்டத்தால் ஆமைகளுக்கு ஆபத்து கடலோர மண்டல குழுமம் கருத்து
/
சி.எம்.டி.ஏ., திட்டத்தால் ஆமைகளுக்கு ஆபத்து கடலோர மண்டல குழுமம் கருத்து
சி.எம்.டி.ஏ., திட்டத்தால் ஆமைகளுக்கு ஆபத்து கடலோர மண்டல குழுமம் கருத்து
சி.எம்.டி.ஏ., திட்டத்தால் ஆமைகளுக்கு ஆபத்து கடலோர மண்டல குழுமம் கருத்து
ADDED : ஏப் 29, 2024 01:12 AM
சென்னை:சென்னையில் மெரினா முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்களை, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ., செயல்படுத்துகிறது.
இதன்படி, ஈஞ்சம்பாக்கம் - அக்கரை வரையிலான 2.3 கி.மீ., தொலைவுக்கு, சைக்கிள் டிராக், சிறுவர் விளையாட்டு திடல், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை கடற்கரை ஆகியவை இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கடல் ஆமைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், வன உயிரின ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இத்திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த ஒப்புதலுக்காக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பம் முதல் கட்டமாக சென்னை மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழும ஆய்வுக்கு சென்றது. இக்குழுமம், விண்ணப்பம் தொடர்பான தங்கள் கருத்துகளுடன், மாநில அளவிலான குழுமத்துக்கு அனுப்பியுள்ளது.
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:
ஈஞ்சம்பாக்கம் - அக்கரை பகுதியை கள ஆய்வு செய்தோம். அது கடலுக்கு மிக நெருக்கமான இடமாக உள்ளது.
அதில், இத்திட்டத்திற்காக ஈஞ்சம்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட பகுதி, கடற்கரையில் இருந்து 328 அடியிலும், அக்கரையில் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி, 98 அடியிலும் அமைந்துள்ளது.
இங்கு, கடலில் இருந்து 131 அடியில், கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான கடல் ஆமைகள் இங்கு முட்டையிடுகின்றன.
உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால், அது கடல் ஆமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில் கடல் ஆமைகள் முட்டையிடுவது பாதிக்கப்பட்டு, அந்த இனம் அழிவதற்கு வழிவகுக்கும்.
இங்கு மக்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தால், மனிதர்களின் கால்தடங்களால் கடல் ஆமை முட்டைகள் மிதிப்படும் நிலை ஏற்படும்.
எனவே, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கான மாநில குழும வல்லுனர் குழுவுடன் இணைந்து, கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட குழுமத்தின் இந்த கருத்துகளுடன், சி.எம்.டி.ஏ., திட்டத்துக்கான கோப்பு, தற்போது மாநில குழுமத்தின் ஆய்வில் உள்ளது.

