/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரசாயன கிடங்கில் மெத்தனால் ஆவடி கமிஷனர் கண்டிப்பு
/
ரசாயன கிடங்கில் மெத்தனால் ஆவடி கமிஷனர் கண்டிப்பு
ADDED : ஆக 04, 2024 12:52 AM

செங்குன்றம்,
கள்ளக்குறிச்சியில், கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்தனர். 150 க்கும் மேற்பட்டோர், வயிற்றுப்போக்கு, கண்பார்வை குறைவு மற்றும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டனர்.
ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு, கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ரசாயன கிடங்குகளில், மூல பொருட்கள் விற்பனையை ஒழுங்குபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, செங்குன்றம், கிராண்ட் லைன், வி.என். ஷர்மா கன்வென்சன் சென்டரில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில், ரசாயன தொழிற்சாலை மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், செங்குன்றம் பகுதியில் உள்ள ரசாயன கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
கமிஷனர் சங்கர், 'வட பெரும்பாக்கத்தில் உள்ள 250 குடோன்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ரசாயன பொருட்கள், ரசீது இன்றி விற்பனை செய்ய கூடாது. விற்பனை செய்யப்படும் மூல பொருட்கள், எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆவணங்களை பராமரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதில், கிடங்கு உரிமையாளர்கள் சார்பில், 'ரசாயன மூலப்பொருட்கள் கையாளும் உரிமம் பெறுவதில் சிக்கல் உள்ளது. உரிமையாளர்களை அலைக்கழிக்காமல், ஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.