/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் ஆற்றில் குவிக்கப்படும் கான்கிரீட் கழிவுகள்; மழைக்காலத்தில் வெள்ள அபாயம்?
/
கூவம் ஆற்றில் குவிக்கப்படும் கான்கிரீட் கழிவுகள்; மழைக்காலத்தில் வெள்ள அபாயம்?
கூவம் ஆற்றில் குவிக்கப்படும் கான்கிரீட் கழிவுகள்; மழைக்காலத்தில் வெள்ள அபாயம்?
கூவம் ஆற்றில் குவிக்கப்படும் கான்கிரீட் கழிவுகள்; மழைக்காலத்தில் வெள்ள அபாயம்?
UPDATED : மே 14, 2024 06:36 AM
ADDED : மே 14, 2024 01:06 AM

மதுரவாயல் - துறைமுக உயர்மட்ட சாலைப் பணிகளில் அகற்றப்படும் துாண்கள் மற்றும் கான்கிரீட் கழிவுகள் கொட்டப்பட்டு, கூவம் ஆறு குப்பைமேடாக மாற்றப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகளால், மழைநீர் வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இப்போதே கழிவுநீர் பெருக்கெடுக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது, இப்பிரச்னைகளால் சென்னையில் செயற்கை பேரிடராக, வெள்ளப் பாதிப்பு அபாய வாய்ப்பு உருவாகி வருகிறது.
சென்னை மாநகராட்சியில், 2,000 கி.மீ.,க்கு மேல் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து, கோவளம், கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 2015 பெரும் வெள்ளப் பாதிப்புக்கு பின், சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால் கட்டமைப்புக்காக, 8,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.
திருப்புகழ் கமிட்டி
ஆனால், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
அக்கமிட்டி பரிந்துரைக்குப் பின், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விடுபட்ட மற்றும் சேதமடைந்த மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் இரண்டாவது கட்டமாக, மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - போரூர் வழியாக, சோழிங்கநல்லுார், பூந்தமல்லி புறவழிச்சாலை - கலங்கரை விளக்கம் என, மூன்று வழித்தடங்களில் 116 கி.மீ., நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன.
இத்தடத்தில் பெரும்பாலான இடங்களில், மேம்பாலப் பாதைக்கான பணிகள் நடந்தாலும், மாதவரம் - தரமணி வரை, சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தில் முக்கிய பகுதிகளான பெரம்பூர், திருமங்கலம், அயனாவரம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு வழியாக சுரங்கப்பணி நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில், இவ்வழித்தடங்களில் ஏற்கனவே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுரங்கப்பாதை அமைக்கும் வழிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், சுரங்கப்பாதை பணிகளால் துண்டிக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகளால், கால்வாய் இணைப்பு துண்டிக்கப்படும் சூழலில், தற்காலிக மாற்று இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேபோல், மதுரவாயல் - துறைமுக உயர்மட்ட சாலைப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் அகற்றப்படும் ராட்சத துாண்கள், கான்கிரீட் கழிவுகள், மண் போன்றவை, கரையை ஒட்டி கூவம் ஆற்றிலேயே கொட்டி வைக்கப்படுகின்றன. சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை கூவம் ஆறு பகுதியில், ஆற்றின் பாதியளவு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
மீண்டும் அபாயம்
ஏற்கனவே, மழைநீர் வடிகால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வரும் நிலையில், கூவம் ஆற்றிலும் கழிவுகள் கொட்டப்படுவதால், பருவ மழைக்காலத்தில் அதிகளவு மழை பெய்தால், பெரியளவில் சென்னை பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது.
இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 2021ல், மாம்பலம் கால்வாயில், சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்படாமல் விட்டதால், அக்கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறி, சுற்றியிருந்த குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டன.
தற்போது, கூவம் ஆற்றில் கான்கிரீட் கழிவுகள் உள்ளிட்ட குப்பை கொட்டப்பட்டுள்ளன. இக்கழிவுகளை, பருவமழைக்கு முன் அகற்றினால் நல்லது. அவ்வாறு அகற்றாமல் விட்டால், கூவம் ஆற்றில் மழைநீர் செல்வது தடைபட்டு, வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோல், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகளால், மழைநீர் வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஒரு சாலைக்கும், மற்றொரு சாலைக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டால், மழை காலத்தில் ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் நீர், மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாமல், சாலையில் தேங்கும் நிலை ஏற்படலாம்.
இதற்கு, தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில், மாற்றுப் பாதையில் இணைப்பு வழங்க, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனால், இதுவரை அவர்கள் அப்பணியை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
தொடர்ந்து அலட்சியம் காட்டினால், 2015 மற்றும் 2021, 2023ல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு போல், மீண்டும் ஒரு பெரிய பாதிப்பை சென்னை மக்கள் சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே, எந்த தவறு நடந்தாலும், மாநகராட்சி மீது தான் மக்கள் குறை கூறுகின்றனர். தற்போதைய சூழல் நீடித்தால், தட்பவெப்ப மாற்றத்தால் வரும் பருவமழையின்போது, அதிகளவு மழை பெய்யும்பட்சத்தில், மீண்டும் வெள்ளப் பாதிப்பை சென்னை எதிர்கொள்ளும்.
அதற்கு முன், தற்காலிக தீர்வுகளை மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத் துறைகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு, மாநகராட்சி ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

