/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் மாசு
/
கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் மாசு
கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் மாசு
கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துரைப்பாக்கத்தில் நிலத்தடி நீர் மாசு
ADDED : ஆக 28, 2024 12:28 AM

துரைப்பாக்கம், பெருங்குடி குப்பைக் கிடங்கு, 225 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு, ஐந்து மண்டலங்களில் உள்ள குப்பை கொட்டப்படுகிறது. பின், 'பயோமைனிங்' முறையில் தரம் பிரிக்கப்படுகிறது. அருகில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
குப்பையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ரேடியல் சாலை மற்றும் குப்பைக் கிடங்கை ஒட்டி உள்ள, துரைப்பாக்கம் பகுதியில் வடிந்து செல்கிறது.
கருப்பு வண்ணத்தில் கழிவு நீராக செல்வதால், பூமிக்குள் இறங்கி நிலத்தடி நீரை மாசடைய செய்கிறது. சதுப்பு நிலத்தை ஒட்டி உள்ளதால், இங்குள்ள பகுதியில் நிலத்தடிநீரில், அதிக உப்பு கலந்துள்ளது.
குடிநீர் இணைப்பு முழுமை பெறாததால், பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர். இதில், குப்பை கிடங்கில் இருந்து வடியும் கழிவுநீர் நிலத்தடிநீரை மாசுபடுத்துவதால், அதில் இருந்து கிடைக்கும் நீரை பயன்படுத்த மக்கள் அச்சப்படுகின்றனர்.
இது குறித்து, துரைப்பாக்கம் பகுதி நலச்சங்கங்கள் கூறியதாவது:
குப்பைக் கிடங்கால், காற்று மாசு அதிகரித்து, சுவாச பிரச்னை, நோய்களால் பாதிக்கப்படுகிறோம். இப்போது, அங்குள்ள கழிவுநீரால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. பல்வேறு இடையூறால், குடிநீர் இணைப்பு வழங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இதனால், நிலத்தடி நீர், லாரி நீரை நம்பி உள்ளோம். கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைவதால், மரங்கள் வளர்ப்பதிலும் தடை ஏற்படுகிறது. அரசு வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என விளம்பரப்படுத்துகிறது.
மண் வளம் நன்றாக இருந்தால் தானே மரம் வளர்க்க முடியும். குப்பைக் கிடங்கில் இருந்த கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லும் வகையில், கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.