/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனுமதியின்றி பள்ளம் தோண்டுவதால் விபத்து அபாயம் அடையாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
அனுமதியின்றி பள்ளம் தோண்டுவதால் விபத்து அபாயம் அடையாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அனுமதியின்றி பள்ளம் தோண்டுவதால் விபத்து அபாயம் அடையாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
அனுமதியின்றி பள்ளம் தோண்டுவதால் விபத்து அபாயம் அடையாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : செப் 10, 2024 12:41 AM

அடையாறு, அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், எட்டு கவுன்சிலர்கள், தெற்கு வட்டார துணை கமிஷ்னர் அமித் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
கிண்டியில் கட்டட அனுமதியின்போது ஒதுக்கப்பட்ட திறந்தவெளி இடத்தை, மாநகராட்சிக்கு ஒப்படைக்காததால், திட்ட பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.
பெசன்ட் நகர் கடற்கரையில், இரு வார்டு எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கோட்டூர்புரத்தில் தரையில் புதைக்கப்பட்டு, ஆபத்தான மின் கேபிள்களை மாற்றி அமைக்க வேண்டும். காமராஜர் சாலையில் வடிகால் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
திருவான்மியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகளை அலைய விடுகின்றனர். மீன் மார்க்கெட் கட்ட வேண்டும்.
முறையாக அனுமதி பெறாமல் மின் வாரியம் சாலையில் பள்ளம் தோண்டுவதால், மழைக்காலங்களில் விபத்து அபாயம் ஏற்படும்.
வேளச்சேரி டி.என்.எச்.பி., திருமண மண்டபத்தை பயன்பாட்டுக்கு விட வேண்டும். தரமணியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதால், நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு, மண்டல தலைவர், அந்தந்த துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். சில அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தி இல்லை என, கவுன்சிலர்கள் கூறினர்.
தொடர்ந்து, மழைக்காலத்தில் மின் வாரியம், நெடுஞ்சாலை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஓ.எம்.ஆர்., டைடல் பார்க், இந்திரா நகர், தரமணியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, பகிங்ஹாம் கால்வாய் அருகில் ஷட்டர் அமைத்து, அதிக திறன் உடைய நீரிறைக்கும் மோட்டார் வைக்கப்படும் என, துணை கமிஷ்னர் அமித் கூறினார்.
இதையடுத்து, சாலை, வடிகால், அம்மா உணவகம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

