/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபத்தான மின்கம்பங்களை அதிகாரிகள் மாற்றவில்லை வளசை மண்டல குழுவில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
ஆபத்தான மின்கம்பங்களை அதிகாரிகள் மாற்றவில்லை வளசை மண்டல குழுவில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஆபத்தான மின்கம்பங்களை அதிகாரிகள் மாற்றவில்லை வளசை மண்டல குழுவில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ஆபத்தான மின்கம்பங்களை அதிகாரிகள் மாற்றவில்லை வளசை மண்டல குழுவில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஆக 22, 2024 12:26 AM
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டல குழு கூட்டம், குழு தலைவர் ராஜன் தலைமையில், ஆற்காடு சாலையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. விவாதம் வருமாறு:
ஸ்டாலின், 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். மதுரவாயல் வரலட்சுமி நகரில் பாதாள சாக்கடை பணி முடிந்தும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. அதற்கான பணியை குடிநீர் வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
சத்யநாதன், 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: நெற்குன்றம் கூவம் கரையோரம் சுடுகாடு அமைந்துள்ளது. இதை பொதுப்பணித்துறை பராமரிக்காமல் உள்ளனர்.
நெற்குன்றம் பகுதி முழுதும் கோயம்பேடு துணை மின் நிலையத்தின் கீழ் வருகிறது. வார்டில் 70 மின் கம்பங்கள் படுமோசமான நிலையில் உள்ளன.
உயிரிழப்பு ஏற்படும் முன், மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கேள்வி எழுப்புவோம் என்பதால், கோயம்பேடு துணை மின் நிலைய அதிகாரிகள் வரவில்லை.
ரமணி மாதவன், 147வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கடந்த ஆண்டு மழையில், ஆலப்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து, 147வது வார்டு மதுரவாயல் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. எனவே, ஆலப்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.
கிரிதரன் 148வது வார்டு அ.ம.மு.க., கவுன்சிலர்: நெற்குன்றம் 145வது வார்டும் கோயம்பேடு துணை மின் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.
வார்டில் 85 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை மாற்றி அமைக்கவில்லை.மழைக்காலம் என்பதால், உயிரிழப்பு ஏற்படும் முன் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
செல்வி ரமேஷ், 149வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வளசரவாக்கம் அன்பு நகரிலுள்ள மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஆலப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், 147வது வார்டு வழியாக 149வது அன்பு நகர் வழியாக தான் செல்கிறது. எனவே, மழைநீர் வடிகாலை மீட்க வேண்டும்.
பாரதி, 152வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ஆற்காடு சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி அருகே, மெட்ரோ ரயில் பணியால் அடிக்கடி கழிவுநீர் தேங்கி வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 152வது வார்டு அம்மா உணவகத்தில் பொருட்கள் திருடியதை, கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தும், இன்னும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
செல்வகுமார், 154வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், மண்டல குழு தலைவர்: மண்டலத்தில் உள்ள அனைத்து சுடுகாடுகளிலும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இது, 4.5 லட்சம் வாக்காளர் கொண்ட தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பேசுகின்றனர்.
அந்த கூட்டத்தில் அதிகாரிகள் அலட்சியமாக மொபைல் போன் பேசுகின்றனர். சபைக்கான கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.