ADDED : ஜூலை 30, 2026 07:03 PM
ரயிலில் கஞ்சா கடத்தியவர் சிக்கினார்
திருவொற்றியூர்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி, ‘ஹவுரா மெயில்’ விரைவு ரயில், நேற்று வந்து கொண்டிருந்தது. திருவொற்றியூர் அருகே மெதுவாக சென்றபோது, வாலிபர் ஒருவர் பையுடன் கீழே இறங்கியுள்ளார். அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவரை மடக்கி பையை சோதனையிட்டதில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், திருவொற்றியூர், காவேரி நகரைச் சேர்ந்த ரோஷன், 19, என்பதும், ஒடிஷாவில் இருந்து கஞ்சா வாங்கி வருவதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்
செங்குன்றத்தில் 30 லி., சாராயம் பறிமுதல்
செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த கோணிமேடில் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அங்குள்ள ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், இரண்டு கேன்களில் 30 லிட்டர் சாராயம் சிக்கியது. விசாரணையில், ஆந்திராவில் இருந்து சொந்த பயன்பாட்டிற்காக சாராயம் வாங்கி வந்து, சரவணன், 32, ஷர்பாசிங், 24 ஆகியோர், குடித்து வந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஸ்க்ரூடிரைவரால் பிளம்பரை குத்தியவர் கைது
ராமாபுரம்: ராமாபுரம், செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் தேவராஜ், 49; பிளம்பர். கடந்த 28ம் தேதி ராமாபுரம் சுந்தரி கார்டனில் உள்ள சாந்தி என்பவரின் வீட்டில் பிளம்பிங் பணி மேற்கொண்டார். அன்றைய தினம் மாலை அங்கு இருந்த கிருஷ்ணமூர்த்தி, 34 என்பவர், வீட்டிற்கு வெளியே உடைந்திருந்த குழாயை உடனடியாக சரிசெய்யுமாறு கூறியுள்ளார். மறுநாள் வந்து சரிசெய்து தருவதாக தேவராஜ் கூறவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, தேவராஜை தாக்கி, ஸ்குரூட்ரைவரால் குத்தினார். காயமடைந்த தேவராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; கிருஷ்ணமூர்த்தியை ராமாபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு ‘காப்பு’
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரிட்டோ, 41. இவர், ஆபிரகாம் தெருவில் காயலாங்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போன், 500 ரூபாய் பறித்து சென்றார். ஆதம்பாக்கம் போலீசாரின் விசாரணையில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சூர்யா, 27, என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது, ஏற்கனவே 21 வழக்குகள் உள்ளன.
ஆட்டோ சேதப்படுத்தி வாலிபர்கள் ரகளை
வியாசர்பாடி: வியாசர்பாடி, பொன்னப்பன் தெருவில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களின் கண்ணாடியை, மது போதையில் இருந்த 16 வயது வாலிபர்கள் கல்லால் அடித்து சேதப்படுத்தினர். இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது வாலிபர்கள் நான்கு பேரை பிடித்து, சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
ஆபாச சைகை காட்டியவருக்கு சிறை
சென்னை: நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண், தன் இரண்டு மகள்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி, 43 என்பவர், அந்த பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 28-ம் தேதி இரவு, வீட்டின் அருகே நடந்து சென்ற அந்த பெண்ணை வழிமறித்த முனுசாமி, மீண்டும் ஆபாச சைகை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். விசாரித்த அயனாவரம் மகளிர் போலீசார் முனுசாமியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2வது மாடியில் இருந்து விழுந்தவர் ‘சீரியஸ்’
புளியந்தோப்பு: கே.பி.பார்க் குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை 2வது தளத்தில் சாரம் கட்டும் பணி நடந்தது. இதில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மன்னன் ஓசைன், 32 என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது போதையில் அட்டூழியம் செய்தவர் கைது
கொளத்துார்: கொளத்துாரைச் சேர்ந்தவர் கண்ணன், 35. இவரது மனைவி பவானி, 29. மதுபோதைக்கு அடிமையான கண்ணன், தினமும் குடித்து வந்து பவானியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். வழக்கம்போல கடந்த 28ம் தேதி பவானியை தாக்கியுள்ளார். இது குறித்து ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையறிந்த கண்ணன், நேற்று முன்தினம் மது போதையில், வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவரது வீட்டின் மின்சாரப்பெட்டி, மின் மீட்டர், ஸ்கூட்டர் உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தியுள்ளார். புகாரை அடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
ரயில் பயணியிடம் போன் பறித்தவருக்கு ‘காப்பு’
கொருக்குப்பேட்டை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 24; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 26ம் தேதி, சூலுார்பேட்டை – சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் வாயில் அருகே நின்று பயணித்தார். பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே, ரயில் மெதுவாக சென்றபோது, அடையாளம் தெரியாத வாலிபர், சூர்யபிரகாஷின் மொபைல் போனை பறித்து சென்றார். விசாரித்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், திருட்டில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்த தனசேகர், 23 என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
