/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி வெள்ள பாதிப்பை தவிர்க்க ஏரிகளை துார்வார தீர்ப்பாயம் உத்தரவு
/
வேளச்சேரி வெள்ள பாதிப்பை தவிர்க்க ஏரிகளை துார்வார தீர்ப்பாயம் உத்தரவு
வேளச்சேரி வெள்ள பாதிப்பை தவிர்க்க ஏரிகளை துார்வார தீர்ப்பாயம் உத்தரவு
வேளச்சேரி வெள்ள பாதிப்பை தவிர்க்க ஏரிகளை துார்வார தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 15, 2024 12:12 AM
சென்னை, செப். 15--
கழிவுநீர் கலப்பதாலும், குப்பை கொட்டப்படுவதாலும் வேளச்சேரி ஏரி மாசடைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்தது.
இது தொடர்பாக, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசனும், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, வேளச்சேரி ஏரியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசிக்குமாறு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, செப்., 10ல் அரசு துறைகளின் செயலர்களை அழைத்து, வேளச்சேரி ஏரியை மீட்டெடுப்பது குறித்து தலைமை செயலர் ஆலோசித்துள்ளார்.
நீர்வளம், சுற்றுச்சூழல், வருவாய், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், சி.எம்.டி.ஏ., நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் வந்து கொண்டிருந்த நான்கு வழிகள் அடைக்கப்பட்டுள்ளன எனவும், ஏரியை சீரமைத்து இப்போதிருப்பதைவிட 22 சதவீதம் நீர் கொள்ளளவை அதிகரிக்க 23.50 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும், நீர்வளத்துறை, சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
நீர் கொள்ளளவை 50 சதவீதம் அதிகரிக்கும் வகையில் ஏரியை ஆழப்படுத்துமாறு, தலைமைச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார். தலைமை செயலரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்குள்ள 955 குடும்பங்களுக்கு வேளச்சேரி பகுதியிலோ அல்லது வேறு இடங்களிலோ மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும்.
வேளச்சேரியை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டுமானால், வேளச்சேரி ஏரியை மட்டுமல்லாது, சுற்றியுள்ள ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, நாராயணபுரம், பள்ளிக்கரணை ஆகிய ஏரிகளையும் துார்வார வேண்டும்.
கிண்டி தேசிய பூங்காவில் உள்ள ஏரியையும் துார்வாரி ஆழப்படுத்த, நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 20ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.