/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழை துவங்கும் நேரத்தில் புது கால்வாய்க்கு பள்ளம்
/
மழை துவங்கும் நேரத்தில் புது கால்வாய்க்கு பள்ளம்
ADDED : செப் 18, 2024 12:48 AM

மாநகராட்சி வேகம்; நெடுஞ்சாலை துறை கடுப்பு
சென்னை, வடகிழக்கு பருவமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், அதிக சேதத்தை எதிர்கொள்கின்றன. இம்மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, தி.மு.க., அரசு 2021ல் முடிவெடுத்தது.
இதற்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைப்படி, நீர்நிலைகளில் துார் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், மழைநீர் கால்வாய் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், மூன்று ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
சென்னையில், நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை துறைகள் வாயிலாக பணிகள் நடந்து வருகின்றன. இதில், நீர்வளம், நெடுஞ்சாலை துறை பணிகள், பெரும்பாலும் முடியும் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், மாதவரம் நெடுஞ்சாலை, தி.நகர் பிரகாசம் சாலை, மயிலாப்பூர் சிவசாமி சாலை, பிராட்வே உட்பட சென்னையின் பல சாலைகளில் மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு, இப்போது தான் மாநகராட்சி வாயிலாக, பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.
இதனால், நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின்சார கேபிள், இன்டர்நெட் கேபிள், குடிநீர் குழாய் உள்ளிட்டவை சேதமடைகின்றன.
குறிப்பாக, தென் சென்னையில் பல பகுதிகளிலும் கால்வாய் பணிகள் அரைகுறையாக உள்ளன. இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளும் சேதமாகி வருகின்றன.
கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, பல இடங்களில் தற்போது தான் மாநகராட்சி துவங்க உள்ளது. மாநகராட்சி நடவடிக்கையால், நெடுஞ்சாலை துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக முற்றுபெறாமல் மழைநீர் கால்வாய் பணி தொடர்வதால், சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் நீடித்து வருகிறது.