/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தயாநிதி முன்னிலையில் மோதிய தி.மு.க., கோஷ்டிகள்
/
தயாநிதி முன்னிலையில் மோதிய தி.மு.க., கோஷ்டிகள்
ADDED : ஏப் 02, 2024 12:23 AM
நுங்கம்பாக்கம், 113வது வார்டில் அடங்கிய தெற்கு மாடவீதியில், தி.மு.க., சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டிருந்தது.
அப்பணிமனையை தயாநிதி திறந்து வைக்க வேண்டும் என, சுரேஷ் விருப்பம் தெரிவித்தார். தயாநிதி வந்தார். அவரை வரவேற்க, 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்திருந்தனர்.
பூமாலைகளையும், பட்டாசுகளையும் எடுத்து வந்திருந்தனர். ஆனால், 'மாலை அணிவிக்கக் கூடாது; பட்டாசு வெடிக்கக் கூடாது' என, மாவட்டச் செயலர் சிற்றரசு தரப்பினர் தடுத்தனர்.
மேலும், அப்பணிமனையை திறக்க வந்த தயாநிதியை, குமரப்பமுதலி தெருவில் தாங்கள் அமைத்திருந்த பணிமனை திறப்புக்கு சிற்றரசு தரப்பினர் அழைத்து சென்று விட்டனர்.
இதனால், அதிருப்தி அடைந்த சுரேஷ், சிற்றரசுவிடம், 'நீங்கள் அரசியல் செய்கிறீர்களா? முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்காக தான் கட்சி பணி செய்கிறேன். உங்களுக்கு அதில் விருப்பமில்லையா?' என, கேட்டுள்ளார்.
அதற்கு சிற்றரசு, 'கட்சியின் புரோட்டோகால் படி தான் பணிமனை திறக்கப்படும்' என்றதும், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இரு தரப்பினரையும் கட்சி நிர்வாகிகள் சமரசப்படுத்தினர்.
அங்கு கூடியிருந்த தொண்டர்கள், 'பணிமனை திறப்பதை கோஷ்டிப் பூசல் காரணமாக, மாவட்ட செயலர் தடுத்து விட்டார்' என, புலம்பினர்.
- நமது நிருபர் -

