/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் காரசாரம் சரமாரி கேள்வி எழுப்பி தி.மு.க.,வினர் ஆவேசம்
/
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் காரசாரம் சரமாரி கேள்வி எழுப்பி தி.மு.க.,வினர் ஆவேசம்
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் காரசாரம் சரமாரி கேள்வி எழுப்பி தி.மு.க.,வினர் ஆவேசம்
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் காரசாரம் சரமாரி கேள்வி எழுப்பி தி.மு.க.,வினர் ஆவேசம்
ADDED : ஜூலை 31, 2024 01:07 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் பொங்கி எழுந்து, காரசாரமான கேள்விகளை எழுப்பினர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு, மின் இணைப்பு பெறப்பட்டதை கண்டித்தும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று காலை நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
காமராஜ், தி.மு.க., 4வது மண்டல தலைவர்: தாம்பரத்திலுள்ள 5 மண்டலங்களில், 4வது மண்டலத்திற்கு மட்டும் குறைந்த நிதியில் கூட்ட பொருள் வந்துள்ளது. ஒரு மண்டலத்திற்கு அதிக நிதி, ஒரு மண்டலத்திற்கு குறைந்த நிதி வைத்து, புறக்கணிப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. 4வது மண்டலத்தில், பள்ளிக்கூடத்திற்கு கழிப்பறை வேண்டும் என, இரண்டரை ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. லாரி தண்ணீர் முறையாக வருவதில்லை, பிரத்யேக வாகனம் இல்லாததால், பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க முடியாமல், பிரச்னை தலைவிரித்தாடுகிறது.
ரமணி, தி.மு.க., கவுன்சிலர், 46 வது வார்டு: எங்கள் ஐந்தாவது மண்டலத்தில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. பாதாள சாக்கடை பணியை செய்யும் வி.வி.வி., என்ற நிறுவனம், முறையாக பணி செய்யாததே, பிரச்னை அதிகரிக்க காரணம். இன்னும் பல தெருக்களில், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவே இல்லை.தெரு பெயர் பலகைகளில், தமிழ் மொழியை தவறாக அச்சிட்டு, அவமரியாதை ஏற்படுத்துகின்றனர். அந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வார்டுகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை.
ஜெயபிரதீப், சுயேச்சை, 3வது மண்டல தலைவர்: எனது மண்டலத்தில், குடிநீர் வரி செலுத்தியும் குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. இந்த மண்டலத்தில், பருவ மழையை எதிர்கொள்ள போதிய பணிகள் செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதை ஞாபகப்படுத்தியும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
யாகூப், ம.ம.க., கவுன்சிலர், 50வது வார்டு: எங்கள் வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இந்த வார்டு மக்கள், கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்கின்றனர். கழிவுநீர் கலந்த தண்ணீரிலேயே குளிக்கின்றனர். ரங்கநாதபுரம் ஏரியில் மருத்துவ கழிவுகள் கலப்பதால், ஏரியை ஒட்டியுள்ள மக்களுக்கு சிறுநீரகம் பழுது, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வார்டு மக்களுக்கு மாநகராட்சியால், சுத்தமான குடிநீரை கூட வழங்க முடியவில்லை.
ஜோசப் அண்ணாதுரை, தி.மு.க., 2வது மண்டல தலைவர்: நகராட்சியாக இருந்த போது, பல்லாவரம் பகுதியில் குடிநீர் இணைப்பிற்கு முன்பணமாக, 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சியாக மாறியதும், 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நகராட்சியாக இருந்த போது, முன்பணம் கட்டியவர்கள், மீண்டும் பணம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே பிரச்னையை தீவிரப்படுத்தி உள்ளது.
இவ்வாறு, கவுன்சிலர்கள் காரசாரமாக கேள்வி எழுப்பினர்.
கவுன்சிலர்கள் கூறிய புகார்களுக்கு பதில் கூற வேண்டிய மேயர், ஒவ்வொரு கேள்விக்கும், அதிகாரிகளிடம் கேட்டு பதில் கூறியதால், பலரும் ஆவேசம் அடைந்தனர். 'மாநகராட்சியில் மேயருக்கு அதிகாரம் உள்ளதா? அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா?' என, அவர்கள் ஆவேசமாக கூறினர்.
விவாதத்தை தொடர்ந்து, 198 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க., வெளிநடப்பு
கூட்டத்தில், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் கூற தெரியாத மேயரை கண்டித்தும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு, மின் இணைப்பு பெறப்பட்டதை கண்டித்தும், கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கூறியதாவது:
அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. எத்தனை கட்டடங்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு, மின் இணைப்பு பெறப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி, அது தொடர்புடைய அதிகாரிகள், புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.