/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவி, கள்ளக்காதலனை எரித்து கொன்ற கணவருக்கு இரட்டை ஆயுள்
/
மனைவி, கள்ளக்காதலனை எரித்து கொன்ற கணவருக்கு இரட்டை ஆயுள்
மனைவி, கள்ளக்காதலனை எரித்து கொன்ற கணவருக்கு இரட்டை ஆயுள்
மனைவி, கள்ளக்காதலனை எரித்து கொன்ற கணவருக்கு இரட்டை ஆயுள்
ADDED : மே 01, 2024 12:27 AM
சென்னை, எம்.ஜி.ஆர்.நகரில் திருமணத்தை மீறி தகாத உறவில் இருந்த மனைவி உள்பட இருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வழக்கில், அவரது கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்., நகர் சூளைபள்ளத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல்முருகன்,38. இவரது மனைவி லட்சுமி, 34.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி, 62 என்பவருக்கும் இடையே, திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த செந்தில்வேல்முருகன், மனைவி லட்சுமியை கண்டித்துள்ளார். மேலும், 2020 மே 31ல் கோவிந்தசாமியின் வீட்டுக்கு சென்ற செந்தில்வேல்முருகன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், 2020 ஜூன் 3ல் தன் மனைவி லட்சுமி, கோவிந்தசாமி வீட்டில் இருப்பதை அறிந்த செந்தில்வேல்முருகன், அங்கு சென்று இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து, இருவரும் உயிரிழந்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்வேல்முருகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
செந்தில்வேல்முருகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. அவர், கொடூரமான முறையில் இரட்டை கொலையை செய்துள்ளார்.
மனைவி, அவருடன் உறவில் இருந்தவரை கொலை செய்த குற்றத்துக்கு, இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகையில், 8,000 ரூபாயை, தாயாரை இழந்துள்ள குழந்தைக்கு வழங்க வேண்டும்.
கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.