/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பு பணி அலட்சியத்தால் செங்குன்றத்தில் பல மணி நேரம் மின் தடை
/
பராமரிப்பு பணி அலட்சியத்தால் செங்குன்றத்தில் பல மணி நேரம் மின் தடை
பராமரிப்பு பணி அலட்சியத்தால் செங்குன்றத்தில் பல மணி நேரம் மின் தடை
பராமரிப்பு பணி அலட்சியத்தால் செங்குன்றத்தில் பல மணி நேரம் மின் தடை
ADDED : ஏப் 24, 2024 01:11 AM

செங்குன்றம், ஐம்பது ரூபாய் செலவை பராமரிக்காத மின் வாரியத்தின் அலட்சியம் காரணமாக, பல மணி நேரம் தொடரும் மின் தடையால், பொதுமக்கள், கோடையில் கொடுமையை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றத்தில், மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், துணை மின் நிலையம் இல்லாததால், புழல், அலமாதி கோடுவெளி, காட்டூர், சோத்து பெரும்பேடு துணை மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
செங்குன்றம் பாடியநல்லுார் சுற்றுவட்டாரங்களில், 50,000க்கும் மேற்பட்ட நுகர்வோர், மின் தேவைக்கான இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப, மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. மாதம் ஒரு நாள், பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்பட்டாலும், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை.
அதனால், செங்குன்றம் சுற்றுவட்டாரங்களில், 20 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட மின் இணைப்பு கம்பிகள், ஏராளமான ‛ஒட்டு' வேலையுடன், ஊஞ்சலாடிக்கொண்டிருக்கின்றன. அதனால், பலத்த காற்றிலும், மரக்கிளைகள் உரசியும், அவை அடிக்கடி துண்டிக்கப்பட்டு, மின் வினியோகம் தடையாகிறது.
நேற்று முன் தினம் இரவு, 10:15 மணி அளவில் புழலில் துண்டிக்கப்பட்ட மின் வினியோகம், நேற்று அதிகாலை, 12:57 மணி அளவில் சீரானது. புழல் இணைப்பில், இரவு 10:45 மணி அளவில் சீரமைக்கப்பட்டாலும், செங்குன்றம் மின் வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால், நேற்று அதிகாலை வரை, மின் வினியோகமின்றி, செங்குன்றம் மார்க்கெட் பகுதி மக்கள், வெப்பத்தின் கொடுமையை அனுபவித்தனர்.
வாரியத்தின் பராமரிப்பில்லாத காரணத்தால், ஒரு மின் கம்பத்திற்கும், மற்றொரு கம்பத்திற்கும் இடையில், மின்சாரத்தை கடத்தும், ‛ஜம்ப்பர்' எனும், இணைப்பு, மின் அழுத்தம் தாங்காமல் ‛கட்' ஆகி, மின் தடை ஏற்படுவதாக மின் வாரிய ஊழியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
அந்த, ‛ஜம்ப்பருக்கான' கம்பி, 1 மீட்டர், 50 ரூபாய்தான். அதை இரட்டை பின்னலாக அமைத்தால், கோடையில் மின் அழுத்தத்தை தாங்கும். ஆனால், மின் வாரியத்தினர், பெயரளவில் ஒற்றை பின்னலாக அமைத்து, வேலையை முடிக்கின்றனர். அதனால், அடிக்கடி மின் தடை ஏற்பட்டு, அதை சீரமைக்க பல மணி நேரமாகிறது.
மேலும், செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தில், இரவு பணியில் உள்ளவர்கள் துாக்கத்தில் மூழ்கி விடுவதால், பொதுமக்களின் புகார்களை அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அதனால், தடையான மின் வினியோகத்தை, மாற்று மின் பாதையில் சீரமைக்க, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், கண்டு கொள்வதில்லை.
மேற்கண்ட பிரச்னையால், கோடையிலும் பல மணி நேர மின் தடையால் அவதிப்படும் மக்கள், மன உளச்சலுக்கும், உடல் நல பாதிப்பிற்கும் ஆளாகின்றனர்.

