/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய பணிகளால் கந்தலான மின் 'கேபிள்'கள்
/
குடிநீர் வாரிய பணிகளால் கந்தலான மின் 'கேபிள்'கள்
ADDED : ஆக 17, 2024 12:41 AM

பெரம்பூர், பெரம்பூர், திரு.வி.க., நகர், அருந்ததி நகரில், தாசர் தெரு மற்றும் வீரராகவன் தெருக்களின் சிமென்ட் சாலையை குடிநீர் வாரியத்தினர் பள்ளம் போட்டு, குழாய் அமைத்தனர்.
அப்போது வீடுகளுக்கு சென்ற மின்சார 'கேபிள்'கள் துண்டிக்கப்பட்டன.
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்கள் குழாய் பதிப்பு பணியை முடித்து விட்டு, பள்ளத்தையும் அரைகுறையாக மூடிவிட்டுச் சென்ற நிலையில், துண்டான மின்சார கேபிள்கள் சீரமைக்கப்படாமல், அப்படியே விடப்பட்டன.
இதனால் அங்குள்ள வீடுகளில் சீரற்ற மின் வினியோகம் ஏற்பட்டு வருகிறது. மேலும், மழை நேரத்தில் அடிக்கடி மின் துண்டிப்பு பிரச்னையும் ஏற்படுகிறது.
உயிர்பலி ஆபத்து ஏற்படுத்தும் அளவிற்கு கேபிள்கள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு, மின்பகிர்மான பெட்டிகளில் இருந்து, ஆபத்தான முறையில் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பகுதி மக்கள் மின்வாரியத்திடம் முறையிட்டால், அவர்கள் குடிநீர் வாரியத்தை நாடும்படி அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:
குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர்கள் தான் மின் இணைப்பை துண்டித்தனர். அவர்களிடம் முறையிடுங்கள் அல்லது கேபிள்களை நீங்கள் தான் வாங்கித்தர வேண்டும் என, மின் வாரியத்தில் கூறுகின்றனர். குடிநீர் வாரியத்திடம் கேட்டால், அது எங்கள் வேலை இல்லையென அலைக்கழிக்கின்றனர். நாங்கள் எங்கு முறையிடுவது என தெரியவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

