/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூங்காவிற்கு ஒதுக்கிய இடம் மதுரவாயலில் ஆக்கிரமிப்பு?
/
பூங்காவிற்கு ஒதுக்கிய இடம் மதுரவாயலில் ஆக்கிரமிப்பு?
பூங்காவிற்கு ஒதுக்கிய இடம் மதுரவாயலில் ஆக்கிரமிப்பு?
பூங்காவிற்கு ஒதுக்கிய இடம் மதுரவாயலில் ஆக்கிரமிப்பு?
ADDED : ஜூலை 08, 2024 01:24 AM
மதுரவாயல்:மதுரவாயல் வரலட்சுமி நகரில், பூங்காவிற்காக ஒதுக்கிய பொது பயன்பாட்டு இடத்திற்கு, வருவாய் துறையினர் பட்டா வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வளசரவாக்கம் மண்டலம் 144வது வார்டு மதுரவாயலில், கடந்த 1973ம் ஆண்டு டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற வரலட்சுமி நகர் உள்ளது.
இந்த நகரை உருவாக்கிய போது, பொது பயன்பாட்டிற்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த இடத்தில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும், நகரில் 20, 30 மற்றும் 50 அடி என, சாலைகளும் உருவாக்கப்பட்டன. தற்போது இப்பகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ளது.
இந்நிலையில், வரலட்சுமி நகரில் இருந்த 50 அடி சாலை மற்றும் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதன் பின் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது, வரலட்சுமி நகரில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு, கடந்த 2ம் தேதி வருவாய் துறை சார்பில், தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு, தனியாருக்கு சாதகமாக பொது இடத்திற்கு பட்டா வழங்கியுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, வரலட்சுமி நகரில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும். வருவாய் துறை அதிகாரிகள் பட்டா வழங்கியது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும், மாநகராட்சி மற்றும் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல், ஒருவர் மேல் ஒருவர் குறை கூறி நழுவி வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மதுரவாயல் வரலட்சுமி நகர், கடந்த 1973ம் ஆண்டு, டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அங்குள்ள பொது நிலங்கள், மாநகராட்சிக்கு இன்னும் தானமாக கிடைக்கவில்லை. இதுகுறித்த ஆவணங்களை, வருவாய் துறையிடம் கேட்டுள்ளோம்' என்றனர்.