/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிச்சுமை, மன உளைச்சலில் போலீசார் போக்குவரத்து பிரிவில் பற்றாக்குறை தீர்க்க எதிர்பார்ப்பு
/
பணிச்சுமை, மன உளைச்சலில் போலீசார் போக்குவரத்து பிரிவில் பற்றாக்குறை தீர்க்க எதிர்பார்ப்பு
பணிச்சுமை, மன உளைச்சலில் போலீசார் போக்குவரத்து பிரிவில் பற்றாக்குறை தீர்க்க எதிர்பார்ப்பு
பணிச்சுமை, மன உளைச்சலில் போலீசார் போக்குவரத்து பிரிவில் பற்றாக்குறை தீர்க்க எதிர்பார்ப்பு
ADDED : மே 07, 2024 12:05 AM
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை காவல் சரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் போதுமான போலீசார் நியமிக்கப்படாததால், தற்போது பணியில் உள்ளோர், வேலைப் பளுவால் திணறி, மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தாம்பரம் காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட 20 காவல் நிலையங்கள், மூன்று சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று பள்ளிக்கரணை சரக காவல் நிலையம்.
இதன் கட்டுப்பாட்டில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, சேலையூர், கானாத்தூர், தாழம்பூர், கேளம்பாக்கம், சிட்லபாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய, ஒன்பது காவல் நிலையங்கள் உள்ளன.
வாகன விபத்து உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளுக்கு வழக்கு பதிவு செய்தல், புலனாய்வு செய்தல், பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் மருத்துவமனை செல்லுதல், நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை, மேற்கண்ட நிலையங்களின் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரே செய்ய வேண்டும்.
ரேடியல் சாலை, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, கிழக்கு கடற்கரை சாலை என, 150 கி.மீட்டருக்கும் அதிக பரப்பு உடைய, இந்த ஒன்பது காவல் நிலையங்களுக்கும் சேர்த்து, ஆய்வாளர், உதவி ஆய்வாளர், போலீசார், ஓட்டுனர், எழுத்தர் என, மொத்தம் 20 பேர் மட்டுமே போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணி செய்கின்றனர்.
இந்த எண்ணிக்கை மிகச் சொற்பமானது என்பதால், பணிபுரியும் போலீசார் வேலைப்பளுவால் திணறி வருகின்றனர்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் கூறியதாவது:
ஒன்பது காவல் நிலையங்களுக்கும், உரிய நீதிமன்ற கோப்புகளை கையாளுதல், ஆவணங்கள் பாதுகாப்பு, எழுத்தர், வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பணிகளில் நான்கு பேரும், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என இருவரும் போக, மீதமுள்ள 14 போலீசார் மட்டுமே விபத்து, மீட்பு, மருத்துவமனை, புலனாய்வு, விசாரித்தல் உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டியுள்ளது.
மேற்கண்ட ஒன்பது காவல் நிலைய எல்லைக்கும் சேர்த்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவில், குறைந்தபட்சம் 30 போலீசார் இருந்தால் மட்டுமே, அனைத்து பணிகளையும் விரைவாக, நேர்த்தியாக செய்ய முடியும்.
தற்போது, 14 பேர் மட்டுமே இப்பணிகளை செய்வதால், கால விரயம் ஏற்பட்டு, பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. தவிர, விடுமுறை எடுக்காமல் பணி செய்ய வேண்டிய நிர்பந்தமும் உள்ளது.
இதனால், பணியில் உள்ள போலீசார் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். தவிர, பொதுமக்களும், விபத்து உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளானோரும், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சம்பந்தப்பட்ட காவல் ஆணையரக உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கரணை காவல் சரக, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு போதுமான எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.