ADDED : செப் 09, 2024 02:56 AM

காசிமேடு:காசிமேடு துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால், 25க்கும் உட்பட்ட விசைப்படகுகள் தான் கரை திரும்பின. இதனால், மீன் வரத்து குறைவாக இருந்தது. அவற்றிலும் சீலா, வரி பாறை, ஓரா, கனாங்கெளுத்தி உள்ளிட்ட சிறு மீன்கள் வரத்து தான் அதிகளவில் இருந்தது.
வரத்து குறைவால், கடந்த நாட்களை போலவே, விலை அதிகரித்து காணப்பட்டது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பும். தற்போது 30 படகுகளில் கூட மீன்கள் விற்பனைக்கு வருவதில்லை.
தொடர் நஷ்டம் காரணமாக, விசைப்படகு உரிமையாளர்கள் படகுகளை தொழிலுக்கு அனுப்புவதில்லை.
இந்த மாதங்களில் வஞ்சிரம், வவ்வால், பாறை உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்து அதிகம் இருக்கும். ஆனால், மீன்பிடி தடை காலம் முடிந்து மூன்று மாதங்களாகியும், இதுவரை பெரிய மீன்களின் வரத்து அதிகளவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.