ADDED : ஏப் 18, 2024 12:16 AM
மெரினா, வலைவீசி மீன்பிடித்த நேரத்தில், சுறாமீன் தாக்கி, மீனவர் காயமடைந்தார்.
சென்னை, மெரினா கடற்கரை அருகிலுள்ள குப்பத்தைச் சேர்ந்தவர் மணிமாறன், 25. இவர், நேற்று முன்தினம் மதியம், மெரினா கடலில் 200 மீட்டர் துாரம் நீந்திச் சென்று, வலைவீசி மீன்பிடிக்க முயற்சித்தார்.
அங்கு மீன்கள் அதிகமாக இருந்த நிலையில், அவற்றை சாப்பிட சுறாமீன் ஒன்று ஆக்ரோஷமாக வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான மணிமாறன், அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார்.
ஆனால் சுறாமீன், மணிமாறனின் வலது காலை கவ்வியுள்ளது. சுறாவிடம் போராடி தப்பித்து, ஒருவழியாக மணிமாறன் கரைக்கு வந்து சேர்ந்தார்.
அவர் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆழ்கடலில் தான், சுறா மீன்கள் வாழும். அரிதாக, சிறிய மீன்களை சாப்பிட, சுறா மீன்கள் கரை அருகே வரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

