/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை ம.தி.மு.க., மாவட்ட செயலர் கைது
/
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை ம.தி.மு.க., மாவட்ட செயலர் கைது
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை ம.தி.மு.க., மாவட்ட செயலர் கைது
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை ம.தி.மு.க., மாவட்ட செயலர் கைது
ADDED : ஆக 28, 2024 12:36 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற கஸ்துாரி, 62, என்பவர் கொலை வழக்கில், ம.தி.மு.க., மாவட்ட செயலர் வளையாபதி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் காலாண்டர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 62. இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி, 2020ல் பணி ஓய்வு பெற்றார். இவர், 30 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.
கஸ்துாரியின் மகன் காமேஷ், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள பல்கலையில் உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.
தனியாக வசித்து வந்த கஸ்துாரி, கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. கடந்த 21ம் தேதி, அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால், அருகில் வசிப்போர் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில், கஸ்துாரி சடலம் இருந்தது. கஸ்துாரியின் மகன் காமேஷுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் வந்த அவர், போலீசில் புகார் அளித்தார்.
கஸ்துாரியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரிசோதனையில், கஸ்துாரியின் தலை, உடலின் சில இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனால், கஸ்துாரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதையடுத்து, வீட்டருகே உள்ள கண்காணிப்பு கேமராக்கள், கஸ்துாரியின் மொபைல் அழைப்புகள் உள்ளிட்டவற்றை கண்காணித்தனர். விசாரணையில், ம.தி.மு.க.,வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வளையாபதி மீது சந்தேகம் எழுந்தது.
காஞ்சிபுரம் அருகே டூ - வீலரில் சென்ற வளையாபதியை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கஸ்துாரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது :
இறந்த கஸ்துாரிக்கும், ம.தி.மு.க., மாவட்ட செயலர் வளையாபதிக்கும் இடையே பல ஆண்டுகளாகவே பழக்கம் உள்ளது. காலாண்டர் தெருவில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை விற்க, வளையாபதியிடம் கஸ்துாரி அணுகியுள்ளார்.
ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என, கஸ்துாரி எதிர்பார்த்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, தகராறு எழுந்துள்ளது.
இதனால், கஸ்துாரியை கொலை செய்ய வளையாபதி திட்டமிட்டுள்ளார். கடந்த 18ம் தேதி கஸ்துாரியின் வீட்டிற்கு சென்று, அவரை அடித்துக் கொன்றுள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வழக்கில் வளையாபதியின் கூட்டாளியாக சந்தேகிக்கப்படும் காஞ்சிபுரம் நிலபுரோக்கர் பிரபு, 50, என்பவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.