/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'முகநுால்' தளத்தில் பழகி மோசடி செய்தவர் கைது
/
'முகநுால்' தளத்தில் பழகி மோசடி செய்தவர் கைது
ADDED : செப் 11, 2024 12:41 AM

அமைந்தகரை,முகநுால் சமூக வலைதளத்தில் பழகி, ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம், 3 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அமைந்தகரை, பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் , 24; பட்டதாரி. இவர், கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை போலீசில் அளித்த புகார்:
ரமேஷ் என்பவர் முகநுால் சமூக வலைதளம் வாயிலாக எனக்கு அறிமுகமாகி, பல மாதங்களாக நட்பு ரீதியாக பழகி வந்தார். அவர், ரயில்வேயில் பணிபுரிவதாகவும், எனக்கும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
அதற்காக, என்னிடம் பல தவணையில் 3 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றார். பின், பல மாதங்களாக, வேலை குறித்து எந்த தகவலும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த ரமேஷை நான்கு மாதங்களாக தேடி வந்தனர். மொபைல் போன் சிக்னல் அடிப்படையில், ரமேஷ் பெரம்பலுாரில் இருப்பது தெரிந்தது. அங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்த, ரமேஷை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போரூரை சேர்ந்த ரமேஷ், 39, என்பதும், வேலை இல்லாமல் இருப்பதும் தெரிந்தது. ஆகாஷிடம் பணத்தை பெற்று ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். அவரை அமைந்தகரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.