ADDED : ஜூன் 19, 2026 02:30 PM
சென்னை, ஜூன் 20–
மாநகர பேருந்துகளில் பயணிக்க, மூத்த குடிமக்களுக்கான இலவச டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என, மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை:
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக, ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தும் வகையில், மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், ஆறு மாதங்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
அடையார், தி.நகர், அண்ணாநகர், தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட 39 மையங்களில், ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை டோக்கன்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம். அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிகள் சேர்க்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
