ADDED : மே 02, 2024 12:25 AM
கோயம்பேடு, கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 12 வயது சிறுமி. இவர், அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், கணவரை விட்டு பிரிந்து, 10 ஆண்டுகளாக கோயம்பேடு காவல் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன், சிறுமியின் தாய் வேனில் பூண்டு, புளி வியாபாரம் செய்த போது, அந்த வேன் ஓட்டுனர் சதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
தந்தையிடம் கோபித்துக் கொண்டு, சிறுமி கடந்த ஏழு மாதங்களாக தாயுடன் வசித்து வருகிறார். அப்போது, தாய் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சதீஷ், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமிக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதால், தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்., 29ம் தேதி சிகிச்சைக்காக சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில், சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, விருகம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்ததில், சதீஷ் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, சிறுமியை கர்ப்பமாக்கிய திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, பூத்தார் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், 34, என்பவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

