/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.என்.டி., - ஜி.எஸ்.டி., சாலைகளில் ஆக்கிரமிப்பு
/
ஜி.என்.டி., - ஜி.எஸ்.டி., சாலைகளில் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 01, 2024 01:43 AM

ஜி.எஸ்.டி., சாலையில் குரோம்பேட்டை - தாம்பரம் பகுதிகளிலும், ஜி.என்.டி., சாலையில் செங்குன்றம் நெல் மார்க்கெட் முதல் திருவள்ளூர் கூட்டுச்சாலை வரையிலும், சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கிண்டியில் துவங்கும் ஜி.எஸ்.டி., சாலையில், சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சாலையோரங்களை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவது அதிகரித்துள்ளது.
தாம்பரத்தில், போக்குவரத்து காவல் நிலையத்தை ஒட்டி சாலையின் இருபுறத்திலும், அதிக அளவிலான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
இதேபோல, குரோம்பேட்டையில், எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் கார், ஆட்டோக்கள் சாலையில் ஓரங்கட்டி வரிசையாக நிறுத்தப்படுகின்றன. பல்லாவரத்திலும், இதே நிலைமை தான் உள்ளது.
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஜி.எஸ்.டி., சாலையில், 'பீக் ஹவர்' வேளையில் கடும் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. போக்குவரத்து போலீசாரும் கூட, இதை கண்டுகொள்ளாதது வாகன ஓட்டிகளை வருத்தமடைய செய்துள்ளது.
எனவே, போக்குவரத்து உயரதிகாரிகள் இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி., சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையில் அதிகரித்து வரும் வாகன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜி.என்.டி., சாலை
இதேபோல், ஜி.என்.டி., சாலையில் செங்குன்றம் நெல் மார்க்கெட் முதல்,திருவள்ளூர் கூட்டுச்சாலை வரை, 1 கி.மீ., துாரத்திற்கு நுாற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. சாலையோரத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளாலும், அங்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது.
செங்குன்றம் காவல் நிலையம் எதிரிலுள்ள தனியார் வணிக வளாகங்கள், நகை, துணிக்கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவற்றில் 'பார்க்கிங்' வசதியிருந்தும், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் ஆகியவை, 10 அடி அகலம் வரை, சாலை மற்றும் சாலை சந்திப்புகளை ஆக்கிரமித்து, பல மணிநேரம் நிறுத்தப்படுகின்றன.
பேருந்து நிலையத்தின் இரு பக்கமும், 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகள் முன்னேறி செல்ல முடியாமல், மற்ற வாகனங்களும் நெரிசலில் சிக்குகின்றன.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட, பேருந்து நிலையத்தை எளிதில் கடந்து செல்ல முடிவதில்லை. போக்குவரத்து பிரச்னையை சீரமைக்க வேண்டிய செங்குன்றம் போக்குவரத்து போலீசார், வண்டலுார் - -மீஞ்சூர் சாலையில் மதுபோதை வழக்கு, விதிமீறல் அபராதம் வசூலில் கவனம் செலுத்துகின்றனர்.
செங்குன்றம் பேருந்து நிலையம் முன், 'சவாரி' பிடிக்கும் அவசரத்தில், அத்துமீறி சாலையில் செல்லும் ஆட்டோக்களால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
விபத்து, உயிரிழப்பு ஏற்படும் முன், போக்குவரத்து போலீசார் விழித்துக்கொண்டு ஜி.எஸ்.டி., சாலை மற்றும் ஜி.என்.டி., சாலைகளில், அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களையும், ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
- நமது நிருபர் -