/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பள்ளி மாணவியர் நாடக போட்டியில் அசத்தல்
/
அரசு பள்ளி மாணவியர் நாடக போட்டியில் அசத்தல்
ADDED : மார் 13, 2025 12:27 AM

எண்ணுார், அரசு பல் மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு நாடக போட்டியில், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கத்திவாக்கம் அரசு பள்ளி மாணவியர் குழு, இரண்டாம் பரிசு பெற்றது.
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லுாரி - மருத்துவமனை சார்பில், 5 ம் தேதி, பற்களின் பாதுகாப்பு, அவசியம் குறித்து, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
இவற்றில், சென்னை முழுதும் இருந்து, 22 தனியார், அரசு பள்ளிகள் மாணவ - மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நாடக போட்டியில், கத்திவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் டெபோரல் தனிஷ்தா, ஜோஷிதா ஸ்ரீ, மகேஸ்வரி, பூர்ணிஷா, லேகா, ஷிவானி அடங்கிய குழு பங்கேற்றது.
இதில், பல் சொத்தை, பல் எடுப்பு, பல் துலக்குதல், அரசு பல் மருத்துவமனையின் அவசியம் உள்ளிட்ட நான்கு தலைப்புகளின் கீழ், நான்கு ஓரங்க நாடகங்களை நிகழ்த்தி அசத்தினர். மாணவியரின் தத்துரூபமான நடிப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பல்வேறு தனியார் பள்ளிகள் பங்கேற்ற இப்போட்டியில், கத்திவாக்கம் அரசு பள்ளி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற மாணவியர் அணிக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை, பள்ளி தலைமை ஆசிரியை அனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் கண்டம்மாள், கோல்டன் மெல்பா உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியர்களை வெகுவாக பாராட்டினர்.