/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டலங்கள் வாரியாக நகர விற்பனை குழு சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
/
மண்டலங்கள் வாரியாக நகர விற்பனை குழு சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
மண்டலங்கள் வாரியாக நகர விற்பனை குழு சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
மண்டலங்கள் வாரியாக நகர விற்பனை குழு சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 02, 2025 12:39 AM
சென்னை, தி.நகரை சேர்ந்த மீனாட்சி, செல்லம்மாள், தேனாம்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேனி உள்ளிட்ட எட்டு பேர், 'சென்னை மாநகரில், தெருவோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி, சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு, 'மாநகரில் வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள், வியாபாரம் செய்ய முடியாத இடங்கள் குறித்தும், நகர விற்பனை குழு நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, கடந்த மாதம் 17ல் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநராட்சி தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையின் விபரம்:
சென்னை மாநகரில் 561 சாலைகள், 35,730 தெருக்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, 70 பகுதிகள் சந்தை பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில், வியாபாரம் செய்யும் பகுதியாக 253 சாலைகளும், வியாபாரம் செய்ய முடியாத பகுதிகளாக 149 சாலைகளும் வரையறுக்கப்பட்டு உள்ளன. 23,232 சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 1,896 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
வியாபாரம் செய்யக்கூடியதாக 573 பகுதிகளையும், வியாபாரம் செய்யக்கூடாதவையாக 1,884 பகுதிகளையும் மாற்றுவதற்கான பரிசீலனை, நகர விற்பனை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சென்னை மாகராட்சிக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஒரே ஒரு நகர விற்பனை குழு தான் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மாநகராட்சியின் அறிக்கைக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒரே ஒரு நகர விற்பனை குழு தான் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குழுவால், அனைத்து விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க சில ஆண்டுகள் ஆகலாம். எனவே, 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக நகர விற்பனை குழுவை அமைக்க வேண்டும்.
தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இந்த 15 மண்டல நகர விற்பனை குழுக்களுக்கும், மாநகராட்சி ஆணையர் தான் தலைவராக இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் பிரிவு 20ன் கீழ், வியாபாரிகள் குறைதீர் குழு அமைக்கலாம். இந்த குழுவுக்கு, சிவில் நீதிபதி அல்லது மாஜிஸ்திரேட் தலைவராக இருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி வாயிலாக, 15 மண்டலங்களில் நகர விற்பனை குழுவை அமைப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கு இரண்டு மாதங்களுக்குள் கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தின் மீது நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் உரிய முடிவை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஏப்ரல் 28ம் தேதி சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.