ADDED : ஜூலை 12, 2024 12:44 AM

ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன் வலசையில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. 19ம் நுாற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டை தீவிரமாக்கிய மகான்.
பாம்பன் சுவாமிகள் தமது 46வது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன் வலசை என்னும் ஊரில் தவம் செய்து, முருகப் பெருமானின் அருளைப் பெற்றார். அவர், 6,666 பாடல்களையும், 32 வியாசகங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார்.
தமிழகம் மட்டுமின்றி விஜயவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகன் நாதம், கோல்கட்டா, கயா என்று காசி வரை திருத்தலை யாத்திரை மேற்கொண்ட பாம்பன் சுவாமிக்கு, 1918ம் ஆண்டு வெப்புநோய் பாதிப்பு ஏற்பட்டது.
அந்நேரம் குமார ஸ்தவம் எனும் ஆறு எழுத்து மந்திர நுாலை இயற்றினார். அந்த பாடலால் பூரண குணமும் பெற்றார். ஓம் சண்முக பதையே நமோ நம எனத் தொடங்கும் இந்த மந்திர பாடல்களைப் பாடுவோர் சண்முக பெருமாள் இரு தேவியர்களோடு மகிழ்வித்து அமர்ந்த காட்சியைத் தரிசிப்பர் எனச் சீடர்களுக்கு உபதேசித்தார்.
அவர் மகா சமாதி அடைந்த பின், அவர் விதித்தபடி சென்னை திருவான்மியூரில் சுவாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு, மகா சமாதியும் அமைக்கப்பட்டது. இங்கு ஏராளமான சித்தர்கள் வந்து செல்கின்றனர். ஆன்மிக வாதிகள் மணிக்கணக்கில் தவம் செய்கின்றனர்.
கடற்கரைக்கு அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால், கடற்கரை மணல் உள்ளது. இந்தக் கோவிலில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. புறாக்கள், நாய்கள் போன்ற ஜீவராசிகளைஅதிகம் காண முடிகிறது.
கோவிலின் உள்ளே கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்திக் கொள்வதற்கு இடவசதி இருக்கிறது. உள்ளே சென்றவுடன் மன அமைதி ஏற்படுவதும் பெரிய அனுபவமாக இருக்கும்.

