/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவிக்காக ரூ.8 லட்சம் கொடுத்து குழந்தை வாங்கிய கணவன் கைது
/
மனைவிக்காக ரூ.8 லட்சம் கொடுத்து குழந்தை வாங்கிய கணவன் கைது
மனைவிக்காக ரூ.8 லட்சம் கொடுத்து குழந்தை வாங்கிய கணவன் கைது
மனைவிக்காக ரூ.8 லட்சம் கொடுத்து குழந்தை வாங்கிய கணவன் கைது
ADDED : ஆக 22, 2024 12:12 AM
வியாசர்பாடி, தம்பதியின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் குழந்தையை வாங்கி விற்ற கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏழு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மனைவிக்காக எட்டு லட்சம் ரூபாய் கொடுத்து குழந்தைய வாங்கியவரும் கைது செய்யப்பட்டார்.
எண்ணுார், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யதாஸ், 31. இவரது மனைவி சியாமளா. தம்பதிக்கு 6, 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சியாமளா மீண்டும் கர்ப்பமானார்.
எண்ணுாரை சேர்ந்த கணேஷ், 39, திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பத்தை சேர்ந்த சரண்யா, 36 ஆகியோர், சியாமளாவிற்கு அறிமுகமாயினர். சியாமளாவிற்கு அவ்வப்போது, சிறுகச்சிறுக 25 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்துள்ளனர்.
குடும்ப கஷ்டத்தை போக்குவதாகவும், மூன்றாவது குழந்தை பிறந்ததும், தங்களுக்கு விற்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சத்யதாஸ், சியாமளா சம்மதித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சியாமளாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது; 10ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அன்றே சியாமாளா மற்றும் சத்யதாஸ் ஆகியோரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, குழந்தையை கணேஷ், சரண்யா ஆகியோர் பெற்று சென்றுள்ளனர்.
குழந்தையை பிரிந்த மன வேதனையில் இருந்த சியாமளா, தன் தாய் நாகவள்ளியுடன், வியாசர்பாடி காவல்நிலையம் சென்று, குழந்தையை மீட்டு தரும்படி கடந்த 15ம் தேதி புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சத்யதாசை கைது செய்தனர். குழந்தை வாங்கி விற்பவர்கள் கும்பலாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சரண்யா, கணேஷ், 39 மற்றும் ராயபுரம், மூலக்கொத்தளத்தை சேர்ந்த பவானி, 34 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
வேலுார் மாவட்டம், காட்டு கொள்ளையூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், 43, கார்பென்டர். திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார். மகேந்திரன் - ரேவதி தம்பதியினருக்கு 15 ஆண்டுகளாக குழந்தை இல்லை.
இதனால் வேலுாரை சேர்ந்த குமுதாவை அணுகி உள்ளனர். பிறந்த குழந்தையை உடனடியாக பெற்றோரிடம் வாங்கி கொடுப்பதாக குமுதா உறுதி அளித்துள்ளார். இதற்காக எட்டு லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளனர்.
ஏற்கனவே அறிமுகமான மூலக்கொத்தளத்தை சேர்ந்த பவானியிடம், குழந்தையை வாங்கி கொடுத்தால், நான்கு லட்சம் ரூபாய் தருவதாக குமுதா கூறியுள்ளார். பவானி தனக்கு தெரிந்த கணேஷ், சரண்யா ஆகியோரிடம் கூற, சத்யதாஸ் - சியாமளா தம்பதியினரின் வறுமையை பயன்படுத்தி அவர்களுக்கு 2.25 லட்சம் ரூபாய் கொடுத்து குழந்தையை வாங்கியுள்ளனர்.
இதையடுத்து, மனைவிக்காக எட்டு லட்சம் ரூபாய் கொடுத்து குழந்தையை வாங்கிய மகேந்திரனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் குழந்தையை மீட்டு, சியாமளாவிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில், குழந்தை வாங்கி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள குமுதாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.