/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கலாம் அறிவுரையை பின்பற்றினால் சாதிக்கலாம் ' தினமலர் ' இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை
/
கலாம் அறிவுரையை பின்பற்றினால் சாதிக்கலாம் ' தினமலர் ' இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை
கலாம் அறிவுரையை பின்பற்றினால் சாதிக்கலாம் ' தினமலர் ' இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை
கலாம் அறிவுரையை பின்பற்றினால் சாதிக்கலாம் ' தினமலர் ' இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை
ADDED : ஜூன் 15, 2024 12:42 AM

திருவள்ளூர், ''அப்துல்கலாம் அறிவுரையை பின்பற்றினால், மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம்,'' என, 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி அறிவுரை வழங்கினார்.
திருவள்ளூர் வட்டம், பாக்கம் அடுத்த கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா பள்ளியில், மாணவ - மாணவியருக்கு, கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக, 'தினமலர்' இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி பங்கேற்று, மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கி பேசியதாவது:
மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நன்றாக கல்வி கற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மூன்று விஷயங்களை சுருக்கமாக பேச விரும்புகிறேன்.
ஒரு கிணற்றில் தண்ணீர் வற்றியதால், அங்குள்ள அனைத்து தவளைகளும் நாம் எப்படி இங்கிருந்து வெளியேறி தப்பிச் செல்வது என, கூடி பேசின. ஒரு தவளை மட்டும் தாவி, தாவி படிப்படியாக மேலேறிக் கொண்டிருந்தது.
அதை கண்ட மற்ற தவளைகள், 'வேண்டாம், ஆபத்து' என எச்சரிக்கை விடுத்தன. ஆனால், அதை பொருட்படுத்தாத அந்த தவளை, மற்ற தவளைகள் தன்னை உற்சாகப்படுத்துவதாக கருதிக் கொண்டு, கிணற்றை விட்டு வெளியேறியது.
அதேபோல் மாணவர்களாகிய நீங்களும், உங்களால் முடியாது என யார் என்ன கூறினாலும், அதை கருத்தில் கொள்ளாமல், பொறுமையுடன் கல்வி கற்று, வாழ்க்கையில் உற்சாகமாக முன்னேற வேண்டும். சாதாரணமாக ஒரு கழுகிற்கு 25 - 30 ஆண்டுகளுக்கு பின், அதன் அலகு, இறகு, நகம் வலுவிழந்து விடும்.
அந்த சமயத்தில் அந்த கழுகு, யாருமில்லாத இடத்திற்கு சென்று, தன் அலகையும், நகத்தையும் பாறையில் குத்தி, இறக்கையை பிய்த்து கொள்ளும். சிறிது காலத்திற்கு பின், மீண்டும் தன் பழைய நிலையை அடைந்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
அதே மாதிரி, படிப்பது ஒன்றை மட்டுமே மாணவர்கள் குறிக்கோளாக கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
மூங்கில் மரத்திற்கு தண்ணீர் விட்டால், நான்கு ஆண்டுகளுக்கு பின், ஒரே வாரத்தில் 100 மீட்டர் உயரம் வரை வளரும். அதுபோல், கல்வி கற்கும் போது, பொறுமையாக உணர்ந்து படித்தால், வாழ்க்கையில் முன்னேறலாம்.
பாரதியார், விவேகானந்தர் மற்றும் அப்துல்கலாம் ஆகியோரின் உபதேசத்தை உணர்ந்தால், நீங்களும் எதிர்காலத்தில் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், உபயதாரர் கந்தசாமி, துணை தலைவர் கிங்ஸ்டன் ஆகியோர் பேசினர். முன்னதாக, மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

