/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய குடியிருப்புகளில் இடைநிற்றல் மாணவர்கள் அதிகரிப்பு போதை, திருட்டில் சிக்க வைக்க துாண்டுதல்
/
வாரிய குடியிருப்புகளில் இடைநிற்றல் மாணவர்கள் அதிகரிப்பு போதை, திருட்டில் சிக்க வைக்க துாண்டுதல்
வாரிய குடியிருப்புகளில் இடைநிற்றல் மாணவர்கள் அதிகரிப்பு போதை, திருட்டில் சிக்க வைக்க துாண்டுதல்
வாரிய குடியிருப்புகளில் இடைநிற்றல் மாணவர்கள் அதிகரிப்பு போதை, திருட்டில் சிக்க வைக்க துாண்டுதல்
ADDED : மே 20, 2024 01:01 AM
சென்னை:சென்னையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 1.50 லட்சம் வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, தமிழக அரசு, சமுதாய வளர்ச்சி பிரிவு என்ற துறையை உருவாக்கி உள்ளது.
இந்த துறை, சமூகநலம், காவல் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
குறிப்பாக, கல்வி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு, நல்லொழுக்கம், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்காணிப்பது, பெண் குழந்தைகள் நலன் உள்ளிட்ட செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.
சமீபத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன், சமுதாய வளர்ச்சி பிரிவு ஆலோசனை நடத்தியது.
இதில், தொண்டு நிறுவனத்தினர் பேசியதாவது:
வடசென்னையில் காசிமேடு, வியாசர்பாடி, ராயபுரம், தண்டையார்பேட்டையில் 80 பேர், தென்சென்னையில், கண்ணகிநகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதியில், 190 பேர், 2023- - 24ம் கல்வியாண்டில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர்.
பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள், இடைநிற்றல் மாணவர்களை, போதைக்கு அடிமையாக்கி, கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்ய வைப்பதுடன், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட வைக்கின்றனர்.
அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தை திருமணம் நடப்பதால், அவர்களும் பள்ளி செல்வதில்லை.
குழந்தை திருமணம் தடுப்பு உதவி எண்ணில் தொடர்பு கொண்டால், போதிய ஒத்துழைப்பு இல்லை. இடைநிற்றல் மாணவ - மாணவியருக்கு கல்வி வழங்கவும், குழந்தை திருமணத்தை தடுக்கவும், வாரியம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமுதாய வளர்ச்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பெற்றோர் கண்காணிப்பு இல்லாததால், படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ - மாணவியர் அதிகரிப்பது உண்மை தான். பெற்றோரிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர் வேலைக்கு செல்வதால், நாங்கள் செல்லும் நேரத்தில் அவர்கள் இருப்பதில்லை. இதனால், வார விடுமுறையை, வேலை நாட்களில் மாற்றி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு, வாரியம் ஒப்புதல் தர வேண்டும்.
மாணவர் நலனுக்காக செயல்படும் இதர துறைகளின் ஒத்துழைப்பும் தேவை. இதற்கும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

