/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி ஏர்போர்டில் தீவிர கண்காணிப்பு
/
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி ஏர்போர்டில் தீவிர கண்காணிப்பு
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி ஏர்போர்டில் தீவிர கண்காணிப்பு
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி ஏர்போர்டில் தீவிர கண்காணிப்பு
ADDED : ஏப் 27, 2024 12:20 AM

சென்னை, கோல்கட்ட விமான நிலையத்தின் மேலாளருக்கு, நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். 'கோல்கட்டா விமான நிலையம் உட்பட, நாட்டில் உள்ள நான்கு விமான நிலையங்களில், குண்டுகள் வெடிக்கும்' என, ஹிந்தியில் கூறி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கோல்கட்டா விமான நிலையத்தில் இருந்து, டில்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்திய விமான நிலைய ஆணையம், மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை ஆகியவை இணைந்து, நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதோடு, பயணியர் மற்றும் விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்களை தீவிரமாக பரிசோதிக்க உத்தரவிட்டது.
அந்தவகையில், சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகல் முதல், தீவிர சோதனைகள் நடக்கின்றன. வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், நேற்று பிற்பகல் முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை, எந்தவிதமான வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், டில்லியில் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த சோதனைகள் தொடரும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் சோதனைகள் நடப்பதால் உள்நாட்டு விமான பயணியர், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச விமான பயணியர் மூன்று மணி நேரம் முன்னதாகவும் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

