/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் பாதாள சாக்கடை இணைப்பு பணியில் முறைகேடு?
/
ஆவடியில் பாதாள சாக்கடை இணைப்பு பணியில் முறைகேடு?
ADDED : ஜூன் 25, 2024 12:44 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, மும்முரமாக நடக்கிறது.
ஆவடி மாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட பட்டாபிராம், கோபாலபுரம் மேற்கு பகுதியில் உள்ள 3, 4, 5 மற்றும் 6வது தெருவில், புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.
இந்த நிலையில், அப்பகுதி கவுன்சிலர் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் தகுதிக்கு ஏற்றவாறு, 8,000 முதல் 15,000 ரூபாய் வரை பெற்று, அதற்கு உரிய ரசீது வழங்காமல், சாலையை உடைத்து இணைப்பு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், ஏற்கனவே பாதாள சாக்கடை இணைப்புக்கு 'டெபாசிட்' தொகை 10,000 கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் மேற்பார்வையில் பணிகள் நடை பெறாததால், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து கவுன்சிலரிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது புறம் இருக்க, 'போனா வராது; பொழுது போனா கிடைக்காது' என்ற திரைப்பட வசனம் போல், சிலர் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க, 'ட்ரில்லிங்' மிஷினுடன் சுற்றி வருவதாக பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''கடந்த 2019ல் ஆவடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதுவரை மண்டல அலுவலகம் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், ஒவ்வொரு தேவைக்கும் கவுன்சிலரை தவிர்த்து, யாரை அணுக வேண்டும் என, தெரியாமல் உள்ளனர். எனவே, மண்டல அலுவலகம் ஏற்படுத்தி, மண்டல அலுவலரை நியமிக்க வேண்டும்,'' என்றனர்.
முறையாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகி, கீழ்கண்ட தொகையை கட்டினால், பொதுமக்கள் ரசீதுடன் பாதாள சாக்கடை இணைப்பு பெறலாம். மற்றபடி, ரசீது இல்லாமல் அவர்கள் கட்டும் தொகைக்கு மாநகராட்சி பொறுப்பாகாது.
- அதிகாரிகள், ஆவடி மாநகராட்சி.