/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருமையாக மாறிய கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பா?
/
கருமையாக மாறிய கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பா?
ADDED : ஆக 28, 2024 12:34 AM

உத்தண்டி, திருவான்மியூர் முதல் கானத்துார் வரை, 18 கி.மீ., துாரம் கடற்கரை உள்ளது. இங்கு, கடற்கரை அழகை ரசிக்க, மீன் வாங்க பொதுமக்கள் குவிவர். சில இடங்களில் ஆமைகள் வந்து முட்டை போட்டு செல்லும்.
இந்நிலையில், சில வாரங்களாக, உத்தண்டி, பனையூர் கடற்கரை கருமை மண் பரப்பாக உள்ளது. புதிதாக கடற்கரையை பார்ப்பவர்களுக்கு, கழிவுநீர் கலந்ததால் மணல் பரப்பின் நிறம் மாறியதாக கருதி, கருநிற மண் பரப்பு பகுதிக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.
இது குறித்து, மீனவர் எஸ். தாமரை செல்வன், 31, கூறியதாவது
கடல் சீற்றம் அதிகரித்து, பெரிய அலை அடிக்கும்போது, மேல் பரப்பில் உள்ள வெண் மணல் கடலுக்குள் அடித்து செல்லப்படும். இதனால், கடற்கரை ஆழத்தில் உள்ள கருநிற மண் வெளிப்படும்.
இவை, ஓரிரு நாள் வரை இருக்கும். மீண்டும், அலையின் தன்மை மாறும்போது, வெண்மணலாக மாறிவிடும். கடல் நீரோட்ட திசை மாற்றத்தை பொறுத்து, டிசம்பர் மாதம் வரை இந்த நிகழ்வு இருக்கும். முன்பு கருநிற மண் குறைவாக தெரிந்தது. தற்போது அதிகமாக தெரிகிறது.
இதனால், மீன்களுக்கு பாதிப்பில்லை. பொதுமக்கள் எப்போதும் போல் கடற்கரைக்கு செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாதாரண நிகழ்வு தான்
திருவான்மியூர் முதல் பனையூர் வரை கடற்கரை பகுதியில், கழிவுநீர் கலக்கவில்லை. இது சாதாரண நிகழ்வு தான். மீன்கள், ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அலையின் வேகத்தை பொறுத்து, சில நேரம் குப்பை, ஆகாய தாமரை கரை ஒதுங்கும். அது எங்கிருந்து வருகிறது என ஆய்வு செய்கிறோம்.
- மாநகராட்சி அதிகாரி.