/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை விபத்து சிகிச்சை மையமாகுமா?
/
ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை விபத்து சிகிச்சை மையமாகுமா?
ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை விபத்து சிகிச்சை மையமாகுமா?
ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனை விபத்து சிகிச்சை மையமாகுமா?
ADDED : ஆக 12, 2024 03:57 AM

நீலாங்கரை:இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ், 24 மணி நேரமும் செயல்படும் விபத்து சிகிச்சை மருத்துவமனை உள்ளது.
கோவளம், கானத்துார், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதியில் விபத்து நடந்தால், முதலுதவி சிகிச்சைக்காக இந்த மருத்துவனையில் சேர்க்கப்படுவர்.
பலத்த காயம் இருந்தால் இங்கிருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புவர். இதற்காக, இரண்டு '108' ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இந்த மருத்துவமனையால், பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், பராமரிப்பு காரணத்திற்காக மருத்துவமனையை மூடுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இங்கு, 24 மணி நேரம் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இதன் அருகில், பொது சுகாதாரத் துறையின் கீழ் பகுதி நேர மருத்துவமனையும், மாநகராட்சியின் கீழ், 100 படுக்கை வசதி உடைய நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையும் உள்ளன.
இங்கு, சாதாரண சிகிச்சை மற்றும் பிரசவம் பார்க்கப்படுக்கிறது. உரிய மருத்துவர் நியமிக்காததால், உயிர் காக்கும் விபத்து முதலுதவி சிகிச்சை இங்கு வழங்குவதில்லை.
இ.சி.ஆரில் விபத்து நடந்தால், தனியார் மருத்துவமனை அல்லது நேராக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால், உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இது குறித்து, ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனை பாதுகாப்பு குழுவினர் கூறியதாவது:
விபத்து உயிர் காக்கும் சிகிச்சை மருத்துவமனையை மூடியதால், ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அருகில் உள்ள 100 படுக்கை வசதி மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தி இருக்க வேண்டும். இங்கு, விபத்து முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள், டாக்டர்கள், ஊழியர்களை நியமிக்கவில்லை.
இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ராயப்பேட்டை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைகளுக்கு நேராக அழைத்துச் செல்ல, 20 கி.மீ., துாரத்திற்கு மேல் பயணிக்க வேண்டும்.
இங்கு, முதலுதவி சிகிச்சை அளித்தால், மேல் சிகிச்சைக்கு வசதியாக இருக்கும். உயிர் இழப்பும் தடுக்கப்படும்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலையிட்டு, விபத்து உயிர் காக்கும் வகையில், 100 படுக்கை வசதியுடன் இருக்கும் மருத்துவமனையை, பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.