/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பள்ளியை அரசு பள்ளியாக்க வலியுறுத்தி 'ஜாக்' அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மாநகராட்சி பள்ளியை அரசு பள்ளியாக்க வலியுறுத்தி 'ஜாக்' அமைப்பு ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி பள்ளியை அரசு பள்ளியாக்க வலியுறுத்தி 'ஜாக்' அமைப்பு ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி பள்ளியை அரசு பள்ளியாக்க வலியுறுத்தி 'ஜாக்' அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 14, 2024 12:21 AM
சென்னை,மாநகராட்சி பள்ளிகளை, அரசு பள்ளிகளாக்க வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான,'ஜாக்' அமைப்பினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையின் பின்புறம் உள்ள அல்லிக்குளம் பகுதியில், நேற்று மாலை 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மட்டும், பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளுக்கான நிதி ஒதுக்குவது, பாடத்திட்ட நடைமுறைகள், ஆசிரியர் பணியமர்த்துதல் மற்றும் இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடக்கின்றன.
அதனால், மற்ற மாநகராட்சிகளில் இணைத்தது போல, இவற்றையும் அரசுப் பள்ளிகளாக்க வேண்டும். இவற்றில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது எங்கள் முதன்மையான கோரிக்கை.
சென்னையைப் பொறுத்தவரை, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள், மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோரை, கல்விப் பணியை செய்ய முடியாத வகையில், பலவிதங்களில் கட்டுப்படுத்துகின்றனர்.
அவர்களின் வாய்மொழி உத்தரவிற்கு கீழ்ப்படியாவிட்டால், உடனே இடமாற்றம் செய்கின்றனர். தற்போது, 59 ஆசிரியர்கள் தொடர்பில்லா இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதை ரத்து செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்ளது போல், அரசாணையை பின்பற்றி, இந்தாண்டு மே மாதம் ஓய்வுபெறுவோரை, அடுத்த மாதம் ஜூன் வரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும்.
சென்னையில் தண்டையார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் உள்ள துவக்க, நடுநிலை பள்ளிகளை, திடீரென மூடிவிட்டனர்.
அதனால், அப்பகுதியில் உள்ள மாணவர்களும், அந்த பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், மீண்டும் அப்பள்ளிகளை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.