/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெயவர்தன் உறுதி
/
பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெயவர்தன் உறுதி
பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெயவர்தன் உறுதி
பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜெயவர்தன் உறுதி
ADDED : ஏப் 09, 2024 11:27 PM

சென்னை, தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தன், சைதாப்பேட்டை தொகுதி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில், பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். உடன், கட்சியினர் இருந்தனர்.
அப்போது அவர் கூறியதாவது:
தென் சென்னை லோக்சபா தொகுதியில், வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை, பறக்கும் ரயில் திட்டம், 2007ல் இருந்து தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற வழக்குகளால், ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே அரை கிலோ மீட்டர் துாரத்திற்கான பணிகள் மட்டும், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன.
நான் எம்.பி.,யாக 2014ல் பொறுப்பேற்றபோது, லோக்சபாவில் இதுகுறித்து வலியுறுத்தி, ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுத்தேன். ஆனால், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னையை முடித்தால் மட்டுமே அடுத்தகட்ட பணி துவங்கப்படும் என, தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, நீதிமன்றத்தில் இருந்ததால், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரை சந்தித்து, நடவடிக்கை எடுத்தேன்.
தொடர் நடவடிக்கைகள் காரணமாக, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமென தீர்ப்பு வந்தது.
நான் எம்.பி.,யாக இல்லாத, 2019 ஜூனில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சார்பில், தமிழக அரசுக்கு ஓர் அறிக்கை வருகிறது. அதில், இழப்பீட்டுத் தொகை இருமடங்காக இருப்பதால், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.
இந்த திட்டம் சார்ந்து தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்ததால், உடனடியாக நில நிர்வாக கமிஷனர் சத்தியபாமா ஜெயக்கொடியை சந்தித்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரையை ஏற்கக்கூடாது என்றேன். உச்ச நீதிமன்றம் சென்றால், 10 - 15 ஆண்டுகள் இந்த திட்டம் இழுபறியாகும் என தெரிவித்தேன்.
இதையடுத்து ஏ.ஜி., பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்னை முடிவுக்கு வந்தது. கடந்த 2019ல் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை முடிந்தது. நில உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் நிதி கொடுக்கப்பட்டது.
மேலும், வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டத்தில், 500 மீட்டர் தொலைவு பாதையில் கட்டுமானப் பணி நடந்து வரும் நிலையில், ஜனவரி மாதம், தில்லை கங்கா நகர் அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்து மூன்று மாதங்களாகியும், தமிழச்சி அதை பார்வையிடவில்லை.
மொத்தம் 18 மாதங்களில் முடித்து வைக்க வேண்டிய திட்டத்தை, 2019 - 2024ம் ஆண்டு வரை மெத்தனப்போக்கில், தி.மு.க., எம்.பி., எந்தவித நடவடிக்கை எடுக்காததால், 5 ஆண்டுகளாகியும் இந்த திட்டம் முடித்து வைக்கப்படவில்லை. நான் எம்.பி.,யானதும் இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

