/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடனை அடைக்க கொள்ளை நாடகம் நகைக்கடை உரிமையாளர் கைது
/
கடனை அடைக்க கொள்ளை நாடகம் நகைக்கடை உரிமையாளர் கைது
கடனை அடைக்க கொள்ளை நாடகம் நகைக்கடை உரிமையாளர் கைது
கடனை அடைக்க கொள்ளை நாடகம் நகைக்கடை உரிமையாளர் கைது
ADDED : ஆக 29, 2024 12:32 AM

ஆவடி, ஆவடி அடுத்த பொத்தூர், அரிக்கம்பேடில் வசிப்பவர் ரமேஷ் குமார், 38. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 12 ஆண்டுகளாக திருமுல்லைவாயில், பிருந்தாவன் அவென்யூ சாலையில், ஜோதி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 15 ம் தேதி இரவு, நகைக்கடையில் புகுந்த மர்ம நபர்கள், கத்தியால் தாக்கி 50 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக போலீசில் புகார் அளித்த ரமேஷ் குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
திருமுல்லைவாயில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கடையில் 'சிசிடிவி' மற்றும் மொபைல் போன் அழைப்பு விவரங்களை வைத்து விசாரித்தனர். விசாரணையில், மர்ம நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். அங்கு, பாலி மாவட்டம், பிவார், பிப்லாஜ் பகுதியில் ஒரு வாரம் முகாமிட்டு, ஹர்சத் குமார் பட், 39 மற்றும் சுரேந்தர் சிங், 35 ஆகியோரை, ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
பிடிபட்ட நபகர்களிடம் நடத்திய விசாரணையில், நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். கடை உரிமையாளர் ரமேஷ் குமார், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். நகை கடையில், கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினால், கடனில் இருந்து தான் மீண்டு விடுவதாகவும், அதற்கு பணம் தருவதாகவும், ஹர்சத் குமார் பட் மற்றும் சுரேந்தர் சிங் ஆகியோரிடம் ரமேஷ் குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி, நகைக்கடையில் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் குமார் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு, அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.