/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசின் விருதுக்கு காஞ்சி நெசவாளர் தேர்வு
/
மத்திய அரசின் விருதுக்கு காஞ்சி நெசவாளர் தேர்வு
ADDED : ஜூலை 26, 2024 12:32 AM

காஞ்சிபுரம் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஆண்டுதோறும் சிறந்த நெசவாளர்களுக்கு விருது வழங்கும். அந்த வகையில், 2023ம் ஆண்டு விருதுக்கு தேர்வாகியுள்ள நெசவாளர்கள் பட்டியல் விபரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து சிறந்த நெசவாளர் விருது, காஞ்சிபுரம், திண்டுக்கல் என, இரு மாவட்டங்களைச் சேர்ந்த இரு நெசவாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணன் என்ற நெசவாளருக்கும், காஞ்சிபுரத்தில், திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த, பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பாலசுப்ரமணியன் என்ற நெசவாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக., 7ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ள தேசிய கைத்தறி தின விழாவில், மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இரு நெசவாளர்களுக்கும் விருது வழங்க உள்ளார். விருதுடன், தாமிர பத்திரம், சான்றிதழ், 2 லட்சம் ரூபாய் வழங்கஉள்ளார்.
காஞ்சிபுரம் திருவள்ளுவர் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த பத்மா, கீதா ஆகிய பெண் நெசவாளர்கள், மத்திய அரசு விருது பெற்ற நிலையில், பத்மாவின் கணவர் பாலசுப்ரமணியன் என்பவருக்கும், இம்முறை தேசிய விருது கிடைத்துள்ளது.
பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் நெய்த கோர்வை ரக பட்டு சேலையை, திருவள்ளுவர் பட்டு கைத்தறி சங்கமும், நெசவாளர் சேவை மையமும் பரிந்துரை செய்ததற்கு நன்றியை தெரிவிக்கிறேன்,'' என்றார்.