/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீண்டும் வேகமெடுத்த காசிமேடு துறைமுகம் பணி
/
மீண்டும் வேகமெடுத்த காசிமேடு துறைமுகம் பணி
ADDED : ஆக 21, 2024 12:39 AM

காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
தினமும், 200 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன. இங்கிருந்து பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல், துபாய், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அன்னிய செலவாணி ஈட்டி தரும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள நவீன மீன் மார்க்கெட்டுகளை போல், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து, மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, 97.75 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
குறிப்பாக, நாகூரார் தோட்டத்தில் 500 விசைப் படகுகளை நிறுத்தும் வகையில் பிரதான வார்ப்பு தளம் மற்றும் படகு அணையும் தளங்கள்; 100 நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்த படகு அணையும் தளம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை பதப்படுத்தும் வகையில், 'மீன் பதப்படுத்தும் கூடம்' மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள், நாகூரார் தோட்டம் புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் விற்பனை தளம் வரை உள்ள 6 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல், காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை, சுற்றுச்சுவர்; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட 25 திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதற்கான பணிகள் கடந்த 2022ல் துவங்கின. ஆனால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் வழக்கு இருந்ததால் கிடப்பில் போடப்பட்டது. பின் மீன்வளத் துறை அதிகாரிகள், கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வாங்கினர். இதையடுத்து மீனவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அவர்களின் வரவேற்பை அடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் பணிகள் துவங்கின. ஆனால் ஆமை வேகத்தில் நடந்தன. இந்நிலையில், வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினர்.
மீன் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரது நலனை கருத்தில் வைத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது. இதில், முக்கிய அம்சமாக, 1 லட்சம் சதுரடியில், படகு பழுதுபார்க்கும் கூடம் அமைக்கப்பட உள்ளது. இதில், 40 படகுகளை ஒரே நேரத்தில் நிறுத்தி பழுது பார்க்கலாம். அடுத்த ஒன்றரை
ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
- கலாநிதி வீராசாமி வடசென்னை எம்.பி.,

