/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்கள் வரத்து குறைவால் களையிழந்த காசிமேடு
/
மீன்கள் வரத்து குறைவால் களையிழந்த காசிமேடு
ADDED : ஜூலை 01, 2024 01:44 AM

காசிமேடு,:மீன்பிடித் தடைகாலம் முடிந்து, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காசிமேடில் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் வரத்து இல்லாததால், மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில், ஏப்., 14ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம். இந்த தடைக்காலம் முடிந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகள், ஒன்றன் பின் ஒன்றாக சென்று கரை திரும்பி வருகின்றன.
கடந்த இரண்டு வாரங்களாக, காசிமேடில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், பெரிய மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது.
இதனால் ஏமாற்றமடைந்த மீன் பிரியர்கள், சிறிய மீன்கள் வரத்தால் ஆறுதல் அடைந்தனர்.
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதலே, மீன்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். ஆழ்கடலுக்கு சென்றிருந்த, 80 விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், பெரிய வகை மீன்களான மயில்கோலா, ஏமன் கோலா உள்ளிட்டவை வரத்து இருந்தது.
அதேபோல, கடந்த வாரங்களில் அதிக வரத்து இருந்த சிறிய வகை மீன்களான வவ்வால், சங்கரா, சீலா, நெத்திலி, வஞ்சிரம் போன்ற மீன்களின் வரத்து, இந்த வாரம் குறைவாக இருந்தது. இதனால், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சற்று களையிழந்து காணப்பட்டது. இதனால், மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மீன்கள் விலை(கிலோ)
வஞ்சிரம் 900
வெள்ளை வவ்வால் 1,100
வவ்வால் 650
சங்கரா 300
சீலா 250
பெரிய இறால் 400
சிறிய இறால் 300
கடம்பா 300
நண்டு 300