/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை... ரணகளம்! போதை பொருள் விற்பனையில் போட்டி
/
இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை... ரணகளம்! போதை பொருள் விற்பனையில் போட்டி
இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை... ரணகளம்! போதை பொருள் விற்பனையில் போட்டி
இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை... ரணகளம்! போதை பொருள் விற்பனையில் போட்டி
UPDATED : ஜூலை 03, 2024 06:36 AM
ADDED : ஜூலை 02, 2024 11:24 PM

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருள் விற்பனை கொடி கட்டுப்பறப்பதால், ரவுடி கும்பல்கள் இடையே போதைப்பொருள் விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கோஷ்டி மோதல், முன்விரோதம், கொலை போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. தாம்பரம் அருகே, போதை பொருள் விற்பனை விவகாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டியில், நள்ளிரவில் வாலிபர்கள் இருவரை ஆட்டோவில் கடத்தி, கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
புதுபெருங்களத்துார், டேவிட் நகரைச் சேர்ந்த சோனு என்கிற கோபாலகிருஷ்ணன், 21, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த, அவரது நண்பர்களான அண்ணாமலை, 22, 'ஜில்லா' என்கிற தமிழரசன், 22 ஆகியோர், கோபாலகிருஷ்ணனிடம் இருந்து போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.
திட்டம்
ஒரு கட்டத்தில், கோபாலகிருஷ்ணனை அணுகாமல், இவர்கள் நேரடியாக வேறு இடத்தில் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதமாக மாறியுள்ளது.
மோதல் வலுத்ததால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், தொழில் போட்டி ஏற்படுத்திய இருவரையும் தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, 24 என்ற ஆட்டோ ஓட்டுனரை சவாரிக்கு அழைத்துள்ளார். ஹரியின் ஆட்டோவில் கோபாலகிருஷ்ணன், அவரது நண்பர்கள் ஆரிப், 22, மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஏறியுள்ளனர்.
பின், குண்டுமேடு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அண்ணாமலை மற்றும் தமிழரசன் ஆகியோரை தாக்கி, ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். ஆட்டோவில் வைத்து அவர்களை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குண்டுமேடு சுடுகாட்டிற்கு சென்றதும், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின், ஆட்டோவை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு ஓட்டுமாறு, ஓட்டுனர் ஹரியை மிரட்டியுள்ளனர்.
இதில் பயந்துபோன ஹரி, 'காஸ்' நிரப்ப வேண்டும் எனக் கூறி, தாம்பரம், கிருஷ்ணா நரில் உள்ள 'பங்க்'கில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, தப்பித்து காவல் நிலையம் சென்று தகவல் கூறியுள்ளார்.
போலீசார், ஆட்டோ ஓட்டுனருடன் குண்டுமேடு சுடுகாட்டிற்கு சென்று பார்த்தபோது, அண்ணாமலை மற்றும் தமிழரசன் இருவரும், ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
மோதல்
போலீசார், கோபாலகிருஷ்ணனின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பீர்க்கன்காரணை போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சென்னையில் சமீபகாலமாக, கஞ்சா, போதை மருந்து விற்பனையில் ரவுடி கோஷ்டிகள் இடையே, தொழில்போட்டி நிலவுகிறது. போதை பொருள் விற்பனையில் ரவுடிகள் தலைமையில் செயல்பட்டு வந்தவர்கள், கூடுதல் லாபத்துக்காக, தனியாக தொழில் நடத்துகின்றனர். அத்துடன், தங்களுக்கென தனி கோஷ்டியையும் உருவாக்குகின்றனர்.
இதனால், தங்கள் வருமானம் பாதிப்பதாக கருதும் ரவுடிகள் ஆத்திரமடைகின்றனர். இது, ரவுடி கும்பல்களுக்கு இடையே கோஷ்டி மோதலை உருவாக்கி வருகிறது.