ADDED : ஆக 28, 2024 11:58 PM
சென்னை, சென்னை மாவட்டத்தில், அயனாவரம் தாலுகாவில் உள்ள கொளத்துார், பெரவள்ளூர், சிறுவள்ளூர் கிராமங்களை உள்ளடக்கி, கொளத்துாரை தலைமையிடமாக வைத்து, புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய சென்னை கோட்டத்தில் வரும்.
புதிய தாலுகாவுக்கு, அயனாவரம் தாலுகாவில் இருந்து, மறு பணியமர்த்தல் வழியே ஏழு பணியிடங்களை மாறுதல் செய்யலாம். புதிதாக 35 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இரவு காவலர் பணியிடத்தை, வெளி முகமை வழியே நிரப்ப வேண்டும்.
கொளத்துார் தாலுகாவுக்கு புதிதாக, பொதுப்பிரிவில் 19 பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக உருவாக்கப்பட்டு உள்ளன.
இரண்டு ஜீப் ஓட்டுனர், ஒரு பதிவுறு எழுத்தர் பணியிடங்கள், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, தற்காலிகப் பணியிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய கொளத்துார் தாலுகாவுக்கு, ஆண்டிற்கு, தொடரும் செலவினமாக, 2.91 கோடி ரூபாய், தொடரா செலவினமாக 32.22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

