/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
/
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
ADDED : ஆக 01, 2024 01:04 AM

சென்னை, கோயம்பேடு ---- ஆவடி இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 80.48 லட்சம் ரூபாயில் நேற்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ., துாரத்தில், மூன்று வழித்தடங்களில், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த மூன்று வழித்தடங்களை நீடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பூந்தமல்லியில் இருந்து பரந்துார் வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடில் இருந்து ஆவடி வரை, மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடில் இருந்து பாடி புதுநகர், அம்பத்துார் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை, மெட்ரோ ரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம், 'ரைட்ஸ்' நிறுவனத்துக்கு, 80.48 லட்சம் ரூபாயில் நேற்று வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்திக் மற்றும் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொதுமேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் ரைட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் பொதுமேலாளர் சுதீப் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இந்த புது வழித்தடம் 16 கி.மீ., நீளத்திற்கு, 15 மேம்பால மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
முழு நீளத்துக்கும் மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக, 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தில் ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. வரும் நவம்பருக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப்பின், மொத்த நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் நிலத்தேவை பற்றிய விபரங்கள் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்ட அறிக்கை
மெட்ரோ ரயில் டிக்கெட் வருவாயுடன் கூடுதல் வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில், வணிக இடங்களை உருவாக்கி வளர்ச்சிக்கு சாத்தியக்கூறுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மாதவரம் பால்பண்ணை, வேணுகோபால் நகர், சாஸ்திரி நகர், ஸ்ரீனிவாச நகர் அயனாவரம், ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை.
ஆர்.கே. சாலை, திருமயிலை மற்றும் அடையார் பேருந்து பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில், வணிக வளர்ச்சி மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
'எஸ்.ஆர்.இ.ஐ., இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு, 57 லட்சம் ரூபாயில் இதற்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.