/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊராட்சி தலைவியின் கணவருக்கு 'குண்டாஸ்'
/
ஊராட்சி தலைவியின் கணவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 29, 2024 12:20 AM
சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் ஊராட்சி மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன்; அ.தி.மு.க., நிர்வாகியான இவர், பாடியநல்லுார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
இவர், கடந்தாண்டு ஆக., 17ம் தேதி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்; 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முத்து சரவணன், ஞாயிறு சதீஷ் ஆகியோர் 'என்கவுன்டர்' செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பார்த்திபன் நினைவு நாளான கடந்த 18ம் தேதி, பார்த்திபனின் அண்ணன் நடராஜன், 53, அவரது முகநுால் பக்கத்தில் கொலை மிரட்டல் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இது குறித்து விசாரித்த செங்குன்றம் போலீசார், சில தினங்களுக்கு முன் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரின் உத்தரவின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நடராஜன், பாடியநல்லுார் ஊராட்சி தலைவியின் கணவர்.

