ADDED : ஆக 13, 2024 12:35 AM
சென்னை,
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணா என்ற கருணாகரன். தண்ணீர் கேன் விற்பனை, போஸ்டர் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் சகோதரரின் கொலை வழக்கில் கைதான கருணாகரன், அந்த வழக்கில் இருந்து விடுதலையானார்.
இதன் காரணமாக, கருணாகரன் மீது சந்திரசேகருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து, சந்திரசேகர், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கருணாகரனை வெட்டி கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2011 நவ., 16ல் இரவு தன் கடையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த சந்திரசேகர், அவரது கூட்டாளிகளான பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா என்ற ராதாகிருஷ்ணன், அசோக்குமார், பாபு ஆகியோர், கருணாகரனை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகர், வெங்கடா என்ற வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட வெங்கடா என்ற வெங்கடேசன் என்பவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.தஸ்னீம் முன் நடந்தது.
போலீசார் தரப்பில், மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ராதாகிருஷ்ணன் உட்பட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.