ADDED : ஏப் 24, 2024 12:07 AM
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை துாக்குவதில் ஏற்பட்ட தகராறில், சக தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம்,41. இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கூலிக்கு சுமை துாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவருடன், ராணிப்பேட்டை அரக்கோணம் தாலுகாவைச் சேர்ந்த குமார் என்ற அழுக்கு குமாரும், சுமை துாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கூலிக்கு சுமை துாக்குவதில், ஏற்கனவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதே போல, கடந்த 2021 மார்ச் 1ம் தேதி, சுமை துாக்குவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிபோதையில், அன்றிரவு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
மறுநாள், ரயில் நிலைய வளாகத்தில் துாங்கிக் கொண்டிருந்த பூங்காவனத்தின் தலையில், மார்பிள் கல்லால் குமார் தாக்கியுள்ளார்.
இதில் தலை, காது ஆகிய பகுதியில் பலத்த காயமடைந்த பூங்காவனம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, கொலை வழக்குப்பதிவு செய்த சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார், குமாரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் முன் நடந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எஸ்.பகவதிராஜ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி,'குற்றம் சாட்டப்பட்ட குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை, பூங்காவனத்தின் மனைவி லட்சுமிக்கு வழங்க வேண்டும்.
மேலும் இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க, சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

