ADDED : மே 04, 2024 12:16 AM

மயிலாப்பூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலி மற்றும் மக்களின் தொடர் எதிர்ப்பால், மயிலாப்பூரில் டாஸ்மாக் கடை மூடப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
மயிலாப்பூர் பகுதியில், மூன்று டாஸ்மாக் கடைகள் இருந்தன. இதில் இரு டாஸ்மாக் கடைகள், குடியிருப்பு பகுதி அருகில் இருந்தன. பொதுமக்கள் தொடர் எதிர்ப்பால், சில மாதங்களுக்கு முன், அந்த இரண்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
ஒரே ஒரு கடை மட்டும், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலைய பாலத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
மயிலாப்பூர் பகுதியில் மட்டும் ஒரே ஒரு டாஸ்மாக் கடை இருந்ததால், அங்கு கூட்டம் அலைமோதியது. மதுக்கூடம் இல்லாத காரணத்தால், அங்குள்ள மார்க்கெட் பகுதியிலேயே அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்த ஆரம்பித்தனர்.
இதனால், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன், எதிர்ப்பும் வலுத்தது. பொதுமக்கள் மறியலும் நடத்தினர்.
இது குறித்து நம் நாளிதழில், பலமுறை செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த கடை, தற்போது பட்டினப்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.