/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நேசிக்கும் ஆன்மிகத்தை எழுத்தாக்கியவர் மா.அரங்கநாதன்'
/
'நேசிக்கும் ஆன்மிகத்தை எழுத்தாக்கியவர் மா.அரங்கநாதன்'
'நேசிக்கும் ஆன்மிகத்தை எழுத்தாக்கியவர் மா.அரங்கநாதன்'
'நேசிக்கும் ஆன்மிகத்தை எழுத்தாக்கியவர் மா.அரங்கநாதன்'
ADDED : ஏப் 18, 2024 12:22 AM

சென்னை, தமிழறிஞர்கள் தெ.ஞானசுந்தரம், கு.வெ.பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு, 'முன்றில்' இலக்கிய அமைப்பின் சார்பிலான, 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது'கள் வழங்கும் விழாவும், 'மா.அரங்கநாதன் படைப்புகள், பொருளின் பொருள் கவிதை' ஆகிய நுால்கள் வெளியீட்டு விழாவும், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தன.
இதில், விருதுகளை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது:
உலக மொழிகளுக்கு ஞானத்தை வழங்கியதும், பாரம்பரியம், பண்பாடு, தனித்துவத்தை வழங்கியதுமான மொழி தமிழ். தமிழில் நவீனத்தை உள்வாங்கி, பற்றுகொண்ட பழமையை, தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் எழுத்தாளரும் என் தந்தையுமான மா.அரங்கநாதன்.
கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களை கற்று, 1950களில் கதைகளாக எழுதியவற்றில், 5,000 ஆண்டு பாரம்பரியம், பண்பாட்டின் சாரம் இருக்கும்.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படைப்பாளர். அவரின் படைப்புகளில் எங்கும் நிறைந்தவனாக எல்லா வயதும் உடையவனாக, 'முத்துக்கருப்பன்' எனும் பாத்திரம் வெளிப்படும். ஆரம்பமும் முடிவும் இல்லாத பயணம் போல, சுதந்திரமாக, தத்துவார்த்தமாக அலையும் பாத்திரம் அது. அவரும் அப்படிப்பட்டவர் தான்.
அவரின் அனைத்து படைப்புகளின் கையெழுத்து பிரதிகளையும், ஒரு பதிப்பகத்தாரிடம் தந்து பதிப்பிக்க சொன்னார். பதிப்பக உரிமையாளர் திடீரென மறைந்தார்.
அவரிடம் தந்த இலக்கியங்கள் கிடைக்கவே இல்லை. நாங்கள் வருத்தப்பட்டபோது, 'உலகின் சிறந்த இலக்கியங்கள் மீண்டும் எழுதப்பட்டே தீரும்' என்றார். அப்படி ஒரு மனநிலை அனைவருக்கும் வாய்க்கப்பெற்றால் அதுவே பேரனுபவம். அனைவரையும் நேசிக்கும் ஆன்மிகத்தையும், மனிதர்களில் பேதங்கள் பாராத மகத்துவத்தையும் எழுதிய படைப்பாளி அவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
'அரசே காய்ச்சுகிறது'
விருதாளர் தெ.ஞானசுந்தரம், ''இந்த விருதை இளைஞர்களுக்கும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்றார்.
விருதாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன் பேசுகையில், ''மா.அரங்கநாதனின் பகடி செய்யும் எழுத்துகளால் பாதிக்கப்பட்டு, 'அன்றாடங்காய்ச்சிகள் அதிகமாகிவிட்டதால், அரசே காய்ச்சுகிறது' என, கவிதை எழுதினேன். மாற்றம் நிகழ்வதற்கு பதில் எனக்கு இடமாற்றம் நிகழ்ந்தது,'' என்றார்.
நிகழ்ச்சியில், கவிஞர்கள் அகரமுதல்வன், ரவிசுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

