/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிலையத்தில் துாங்கியவர் பஸ் மோதி பலி
/
பஸ் நிலையத்தில் துாங்கியவர் பஸ் மோதி பலி
ADDED : ஆக 16, 2024 12:08 AM
திருவேற்காடு,
புரசைவாக்கம், கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 48; கூலித்தொழிலாளி.
இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தைப் பிரிந்து, திருவேற்காடு பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில், மது போதையில் துாங்கியுள்ளார்.
திடீரென புரண்டு படுத்த போது, பேருந்து செல்லும் வழியில் தவறி விழுந்துள்ளார்.
அப்போது, பெரம்பூரில் இருந்து திருவேற்காடு வந்த தடம் எண்: '29இ' அரசு பேருந்து, ஏழுமலையின் தலை மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலின்படி வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த ஓட்டுனர் ஜம்புலிங்கம், 50, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த நடத்துனர் சாமிநாதன், 39, ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.
முதியவர் உயிரிழப்பு
அதேபோல், மந்தைவெளியிலிருந்து பிராட்வே செல்லும் தடம் எண் '21' மாநகர பேருந்து, நேற்று முன்தினம் இரவு ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்றது.
தபால் நிலையம் அருகே சென்ற போது, சாலையை கடக்க முயன்ற ஒரு முதியவர் மீது மோதியது. இதில் முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் அம்சராஜ், 54, என்பவரிடம் விசாரிக்கின்றனர். இறந்த முதியவர் யார் என்பதும் குறித்தும், விசாரணை நடக்கிறது.