/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யு - டர்ன்' பகுதிகளில் சிக்னல் இல்லாததால் 20 நாட்களில் 50க்கும் மேற்பட்ட விபத்துகள்
/
'யு - டர்ன்' பகுதிகளில் சிக்னல் இல்லாததால் 20 நாட்களில் 50க்கும் மேற்பட்ட விபத்துகள்
'யு - டர்ன்' பகுதிகளில் சிக்னல் இல்லாததால் 20 நாட்களில் 50க்கும் மேற்பட்ட விபத்துகள்
'யு - டர்ன்' பகுதிகளில் சிக்னல் இல்லாததால் 20 நாட்களில் 50க்கும் மேற்பட்ட விபத்துகள்
ADDED : மார் 31, 2024 02:13 AM

சென்னை:சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றாக ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இங்கு, ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
தற்போது, ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, ஆறு வழிச்சாலை நான்கு வழியாக மாற்றப்பட்டது.
தற்போது, ஒவ்வொரு சிக்னலாக அடைத்து, 100 முதல் 500 மீ., இடைவெளியில், 'யு - டர்ன்' செய்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில், டைடல் பார்க், எஸ்.ஆர்.பி., டூல்ஸ், பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய சிக்னல்களில், 'யு - டர்ன்' அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பாதசாரிகளுக்கும் சில இடங்களில், சாலையின் குறுக்கே வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 'யு - டர்ன்' பகுதியில், சாலையில் இருந்து 1 அடி உயரத்தில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, அருகில் சென்றால் தான் கண்ணுக்கு புலப்படும்.
தொலைவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால், புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மேலும், இடது பக்கமாக செல்லும் வாகனங்கள், 'யு - டர்ன்' அருகில் சென்று திடீரென வலது பக்கம் திரும்புவதால், அடிக்கடி விபத்தும், நெரிசலும் தொடர்கதையாகி உள்ளது.
கடந்த 20 நாட்களில், ஏழு 'யு - டர்ன்'களிலுமாக, 50க்கும் மேற்பட்ட சிறிய விபத்துக்கள் நடந்துள்ளன. குறிப்பாக, இரவில் தான் அதிக விபத்துகள் நடக்கின்றன.
இதன் காரணமாக, அவசரமாக வேலை உள்ளிட்ட தேவைகளுக்கு செல்வோர் மிகவும் பரிதவிக்கின்றனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
எனவே, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், 'யு - டர்ன்' பகுதியை எளிதில் அடையாளம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அதேபோல, இரவில் நடக்கும் விபத்துகளை தடுக்க, மஞ்சள் விளக்கு விட்டு விட்டு எரியும் வகையில், ஒற்றை சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

