/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்சியினர் வைத்த தண்ணீர் பந்தல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்
/
கட்சியினர் வைத்த தண்ணீர் பந்தல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்
கட்சியினர் வைத்த தண்ணீர் பந்தல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்
கட்சியினர் வைத்த தண்ணீர் பந்தல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றம்
ADDED : மே 01, 2024 12:43 AM
சென்னை, தமிழகம் முழுதும் கடுமையான அனல் காற்று வீசுகிறது. வெளியில் நடமாடும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், அரசியல் கட்சிகள் சார்பில், சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில தண்ணீர் பந்தல்களில், தங்கள் கட்சி தலைவர்களின் படங்கள், கொடிகளும் வைக்கப்படுவதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக, தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில், த.மா.கா., மாநில நிர்வாகி நந்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, நேற்று முன்தினம் வாசன் திறந்து வைத்தார்.
நேற்று, தண்ணீர் பந்தலில் குடிநீர், மோர் வழங்குவதற்கு த.மா.கா.,வினர் வந்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
தண்ணீர் பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியிருந்தனர்.
இது குறித்து வாசன் வெளியிட்ட அறிக்கையில், 'பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நீர்மோர் பந்தலை, தமிழக அரசு, அறிவிப்பின்றி அப்புறப்படுத்தியது நியாயமற்றது.
'பொதுமக்கள் நலன் கருதி, தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் செய்யும் சேவைப்பணியை, தமிழக அரசு புறக்கணிப்பது ஏற்புடையதல்ல' என கூறியுள்ளார்.
திருவொற்றியூரில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் ஏற்பாட்டில் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 25ம் தேதி நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், திருவொற்றியூர் உதவி பொறியாளர் மனோஜ்குமார் தலைமையிலான மாநகராட்சியினர், அ.தி.மு.க., கொடி, பந்தல், தண்ணீர்பந்தல் வைப்பதற்கு அனுமதி இல்லை எனக்கூறினர்.
பின், பந்தல் அருகே வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் படங்கள் அச்சிடப்பட்ட பேனர்களை, 27ம் தேதி, மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் 100க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், கிழிக்கப்பட்ட பேனர்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த நாளே, பல பகுதிகளில் தி.மு.க.,வினர், தண்ணீர் பந்தல்களை திறந்தனர்.
அ.தி.மு.க.,விற்கு தண்ணீர் பந்தல் வைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தி.மு.க.,விற்கு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதித்த மாநகராட்சிக்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் புகார் அளித்தார். இதையடுத்து, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தண்ணீர் பந்தல்களும் அகற்றப்பட்டன.